டெல்லி:
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்க ஆணைய குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் நிலைமை குறித்து அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். அதோடு, சகிப்பின்மை அதிகரிப்பு, சிறுபான்மையினர் மீது வன்முறை தாக்குதல் போன்றவை குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள சர்வதேச மத சுதந்திர ஆணைய குழுவினர் நேற்று (4ம் தேதி) இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்தனர். நரேந்திர மோடி ஆட்சியில் மத சுதந்திரம் குறித்து விவாதிப்பதற்கும், நிலவரத்தை அறிந்து கொள்ள ஆணைய குழுவினர் வருவதற்காக விசா கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. நிராகரித்துள்ளது.
அந்த ஆணையத்தின் தலைவர் ராபர்ட் ஜார்ஜ் கூறுகையில்,‘‘விசா வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடும், ஜனநாயகம், பிரிவினையற்ற, பன்முகம் கொண்ட இந்தியா போன்ற நாடு எங்களது வருகையின் மீது நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும்.
மத சுதந்திரத்துக்கு எதிராக மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான்ல சவுதி அரேபியா, சீனா, வியட்நாம், பர்மா போன்ற நாடுகள் கூட எங்களது வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக கருத்துக்களை கூற இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை வரவேற்றிருக்க வேண்டும்’’ என்றார்.
சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில் மத சுதந்திரத்தின் மீது வன்முறை நிகழ்ந்துள்ளதா? என்பதை கண்டறியவே இந்த பயணத்துக்கு, அமெரிக்க அரசு மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்த ஆணையத்தின் ஆண்டறிக்கையில்,‘‘ கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.