புதுடெல்லி: தற்போது பாரதீய ஜனதாவிலுள்ள பல தலைவர்கள் அவமானப்பட்டு புண்பட்டுப் போயிருந்தாலும், அவர்களால், மோடியையோ மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷாவையோ எதிர்த்து எதுவும் பேச முடிவதில்லை என்று காங்கிரசில் இணைந்த முன்னாள் பாஜக எம்.பி. சாவித்ரிபாய் புலே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்த உத்திரபிரதேச மாநில பஹ்ரைக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சாவித்ரிபாய் புலே கூறியதாவது, “பாரதீய ஜனதாவை அத்வானி எந்தளவிற்கு வளர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு தற்போது கட்சியில் எந்த மரியாதையும் கிடையாது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயந்து மற்றவர்களாலும்கூட அத்வானிக்கு மரியாதை கொடுக்க முடிவதில்லை. அந்த இருவரின் குணநலன் கட்டாயம் கட்சியை அழித்துவிடும்.
பாரதீய ஜனதாவை, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தோற்கடிக்க முடியும். உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி கரைசேராது. எனக்கு அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மீண்டும் வழங்குவதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய பாரதீய ஜனதா அரசு இழைத்துள்ள கொடுமை இதுவரை இல்லாத ஒன்று” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இவரின் கட்சி மாறுதல் குறித்து கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தரப்பு, “புதிய இடத்தின் முதலாளிகளை திருப்திப்படுத்தவே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்து நல்ல பெயர் எடுக்க நினைக்கிறார்” என்று சாடியுள்ளனர்.
– மதுரை மாயாண்டி