a

பொதுவாக வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் மாதம்வங்கி, டிசம்பர் மாதம் முடியும். ஆனால் இந்த வருடம் அக்டோபரில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனால், நவம்பர் மற்றும் டிசம்பரில் பெரும் மழை பெய்து வெள்ளத்தை உருவாக்கிவிட்டது

தற்போது, வட கிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த, இரு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம். மற்றபடி வரும் 26ம் தேதி வரை, வறண்ட வானிலையே தென்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் வானிலை ஆய்வு மையங்கள், டிச., 27 முதல், அடுத்த மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளன.

இதுகுறித்து, டில்லியை தலைமையிடமாக கொண்டுள்ள, ‘ஸ்கை மெட்’ தனியார் வானிலை மையம், நேற்று வெளியிட்ட அறிக்கையில், “டிச., 27ல், தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகரலாம். இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்காலில் ஆகிய பகுதிகளில் மிகக் கனத்த மழை பெய்யும்.சென்னையில், 27, 28ம் தேதிகளில், கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இந்த மழையே, வட கிழக்கு பருவ மழையின் இறுதி கட்டமாக இருக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மழை பதிவு

குமரி கடலில் நிலவிய காற்று மேலடுக்கு சுழற்சி, லட்சத் தீவு மற்றும் மாலத் தீவு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதனால், நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம், பாபநாசம் – 11, கன்னியாகுமரி – 8, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் – 5 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது.