பாலியல் குற்றச்சாட்டில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகிய பிரச்னையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது குற்றம்சுமத்தி கையெழுத்திட்டவர்களில், பெரும்பாலோருக்கு கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெரியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேகாலயா ஆளுநராக இருந்த வி.சண்முகநாதன், வேலை கேட்டு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என குற்றம்சாட்டி, ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த 100 ஊழியர்கள் கையெழுத்தி்ட்ட கடிதம், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து, மேகாலாயா மாநிலத்தில் வெளிவரும் ஷில்லாங் டைம்ஸ் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், குற்றச்சாட்டு கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பது, கையெழுத்திட்ட 100 பேர்களில் பெரும்பாலோருக்கு தெரியாது என்றும், ஆளுநர் மாளிகையில் கணக்காளராக பணிபுரியும் லிங்டோ என்ற பெண் கூறியதன் பேரில் கையெழுத்திட்டனர் என்றும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கையெழுத்திட்ட நபர்களில் ஒரு பெண் இதுகுறித்து கூறுகையில், கையெழுத்து போடாவிட்டால் எங்களது சம்பளம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான கோப்புகள் எதுவும் நகராது என சொன்னதால் கையெழுத்து போட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்தால் தான் உண்மையைச் சொல்ல தயாராக இருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால் என்ன எழுதியிருக்கிறது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று்ம் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் கையெழுத்திட்ட நபர்களில் பலர் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டு கடிதத்தில், ஆளுநர் மாளிகையின் அன்றாட தேவைகள் துறைக்கான உயரதிகாரி அனாமிகா தத்தா முதல் நபராக கையெழுத்திட்டுள்ளார். அவரது துறையின் கீழ் தான் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடிதம் குறி்தது கேட்ட போது அவர் பதிலளிக்க விரும்பவில்லை.
குற்றச்சாட்டு கடிதத்தில், சிலர் கையெழுத்திடவில்லை. அவர்களின் விரல் ரேகைகள் இடம் பெற்றுள்ளன. கையெழுத்திட்ட 30 நபர்கள், தாங்கள் வகிக்கும் பொறுப்பை குறிப்பிடவில்லை.