Electric-shock-660x330

சென்னை:

சென்னை வேளச்சேரியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்தில் சூளை பகுதியைச் சேர்ந்த இளைஞகர் இதே போல் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.

சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (29). கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுதா (26). இவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ (4), திவ்யாஸ்ரீ (2) என 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு ஏழு மணியளவில் கருணாநிதி தனது மனைவி, மற்றும் இரு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டின் அருகே உள்ள மாவு கடையில், தோசை மாவு வாங்குவதற்கு நின்றிருந்தார் கருணாநிதி. அப்போது அங்கிருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது.

இதைக் கண்டதும் பதறிய கருணாநிதியும் அவர் மனைவி சுதாவும் தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அருகில் உள்ள மணல் பகுதியில் அவர்களை தள்ளிவிட்டனர். அறுந்து விழுந்த மின்சார வயர் கருணாநிதி, சுதா ஆகியோர் மீது விழுந்தது. மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதைக் கண்ட இரு குழந்தைகளும் கதறி அழுதனர். சுதாவின் மார்பு மீது வயர் விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் அவரது மார்புப் பகுதியே கருகிவிட்டது.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டார்கள். பிறகு மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சார இணைப்பை துண்டித்தனர். காயங்களுடன் இருந்த இரு குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஆத்திரமடைந்த அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த மக்கள், ஒன்று திரண்டு நூறடி சாலையில் போராட்டத்தில் இறங்கினர்.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர்கள் முருகேசன், குமார், அழகு, நந்தகுமார், தன்ராஜ் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். . ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

வேளச்சேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் வந்து மக்களை சமாதானப்படுத்தினார்.

தம்பதியினர் மின்சாரம் தாக்கி இறந்தது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. “இந்த பகுதியில் மின்சார வயர் அடிக்கடி அறுந்து விழுந்து விடுகிறது. அதை நிரந்தரமாக சரி செய்யாமல் அவ்வப்போது வந்து ஒட்டி விட்டுச் சென்றுவிடுகிறார்கள் மின்சார வாரிய ஊழியர்கள்.

சமீபத்தில் கூட ஒரு நாய் மின்சாரம் தாக்கி மரணமடைந்தது. மின்வாரியத்தின் அலட்சியமே இரு உயிர்கள் பலியாக காரணம்” என்று பொதுமக்கள் குறறம் சாட்டுகிறார்கள்.