
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாகயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒரு நாள் ஊர்த்தலைவர் அவரைப் பார்த்து ” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் மகனோ ஒரு வடிகட்டிய முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறானே. வெட்கக்கேடு!” என்று கிண்டலாகச் சொன்னார். அறிஞர் மிக வருத்தமடைந்தார்.
பையனை அழைத்துக் கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்பது உனக்குத் தெரியாதா?”
அதற்கு அவர் மகன் சொன்னான் ”ஏன் தெரியுமே, தங்கம் தான்”
”பின்பு ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”எனக் கேட்டார்.
பையன் சொன்னான் ”தினமும் நான் பள்ளி செல்லும்போது ஊர்த்தலைவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துக் கேட்பார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். இது ஓராண்டாக நடக்கிறது. தினமும் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு அந்த விளையாட்டு முடிந்து விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போய்விடும். எனவே தான் அவரிடம் தவறான விடையை கூறினேன்…” என்றான்.
அறிஞர் திகைத்து நின்றார் !
மற்றவர்களை மகிழ்விப்பதற்காக, வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம். நாம் உண்மையாக தோற்பதில்லை. ஒரு கோணத்தில், அவர்கள் வெல்வதாக ஒரு தோற்றத்தை மட்டும் கொடுக்கிறோம்.
மற்றொரு கோணத்தில், நாம் முழுமையாக வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்!
-கனகம் தங்கவேல்
(படித்ததில் பிடித்தது)
Patrikai.com official YouTube Channel