மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி: பள்ளிக்கூடங்களில் ஐஎஸ்ஐஎஸ் பாடம்
மாணவர்களுக்கு வெடிகுண்டுகள் செய்வது எப்படி? என்று ஐஎஸ்ஐஎஸ் எனும் தீவிரவாத அமைப்பு பாடம் நட்த்துவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகவும் அச்சுறுத்தலான தீவிரவாதக் கும்பலாக ஐஎஸ் ஐஎஸ் திகழ்கிறது. இது தன்னுடைய அமைப்பில் உலகம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு தீவிரவாதக் கருத்தியலை புகுத்தி அவர்களுக்கு வெடிகுண்டுகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுவதாக ஈராக்கிலிருந்து தப்பியோடிய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளை தீவிரவாத பயிற்சி இடமாக ஐஎஸ்ஐஎஸ் மாற்றிவிட்ட்து. அங்கு மாணவர்களுக்கு தீவிரவாதச் சிந்தனைகளைத்தான் போதிக்கிறார்கள். மேலும். வெடிகுண்டுகள் தயாரிப்பது, தற்கொலைப்படைத்தாக்குதல், துப்பாக்கிச் சண்டைப் பயிற்சி ஆகியவை பயிற்சி அளிக்கப்ப்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தப்பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் பெற்றோர்கள் உதவியுடன் தப்பி ஓடிவந்த 12 வயது சிறுவனை மனித உரிமை அமைப்புகள் நேரில் சந்தித்து பயிற்சியின் நிலவரம் குறித்து கேட்டன. அப்போது இந்த திடுக்கிடும் தகவல்களை அந்த மாணவன் தெரிவித்துள்ளான்.
ஈராக் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவருவதால் அப்பகுதியில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பயந்து மறுத்துவருகின்றனர். பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களுக்குப் பதில் திரு குர் ஆன் மட்டுமே உள்ளது.ஆரம்பத்தில் மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுமதித்தனர். பின்னர் 12 வயதுக்கு மேல் உள்ள சிறுமிகள் பள்ளிக்கூடங்களுக்கு வரக்கூடாது என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தடுத்து நிறுத்தி உள்ளது.
பள்ளிகள் என்ற போர்வையில் மாணவர்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளிப்பதை தடுத்து நிறுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. இளம் தலைமுறையைச் சீரழிக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்த தீவிரவாதப்போக்கு பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.