எனது தந்தை சாரணர் ஆசிரியர் ஆக இருந்ததால் தைப்பூசம் சமயங்களில் வடலூருக்கு தந்தையுடன் செல்வோம், சாரணர் பணி, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் என்று அவரும் அவரது மாணவர்களும் இருக்க நாங்களும் அவர்களுடன் இருப்போம். வெள்ளை வேட்டியால் முக்காடிட்டு இருக்கும் இராமலிங்க அடிகளார் உருவ பொம்மையை ஒவ்வொருமுறையும் வாங்கி வருவேன். இந்த முறை கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தின் போது செல்ல திட்டமிட்டிருந்தேன், சில தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல இயலவில்லை. காலை வெற்றிக்கதிரவன் உடன் ஜோகூர்பாரு கோவிலுக்கு சென்று தைப்பூசத்தை கொண்டாடினோம்.
தீபாவளி கொண்டாடுவதற்கு முன் தமிழர்கள் வெளியேறி எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் தைப்பூசத்திருவிழா தமிழர்களின் அடையாளமாக, கலாச்சார திருவிழாவாக நடைபெறுகிறது. சிங்கப்பூர், மலேசியா மட்டுமல்ல தமிழே பேச தெரியாமல் இருக்கும் தமிழர்கள் வாழும் மொரீசியஸ் தீவு, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் சிறப்பாக தமிழர்களின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ தைப்பூசத்தை ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளூர் விடுமுறை விடும் சாதாரண விழாவாக வைத்துள்ளோம்.
திராவிடத்திடம் நாம் இழந்தது வெறும் அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, நம் விழாக்கள், பண்பாட்டு கலாச்சாரங்களையும் தான். திரா’விட’த்திடம் இருந்து நாம் மீட்க வேண்டியது அரசியல் மட்டுமல்ல, நம் ஆன்மீக பண்பாட்டு அடையாளங்களையும் தான்..!
பொன்னுசாமி புருசோத்தமன்