புத்ரஜெயா:
மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 100 கோடி ரிங்கெட்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறுத்து மலேசியா துணை கல்வி அமைச்சர் தாதுக் பி.கமலநாதன் கூறுகையில்,‘‘நாட்டில் உள்ள 524 தேசிய தமிழ் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்துவதில் பிரதமர் தாதுக் செரி நஜிப் ஆர்வமாக உள்ளார். இதற்கு 100 கோடி ரிங்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கட்டடங்களில் பழுது நீக்குதல், உபகரண கொள்முதல், கூடுதல் கட்டடங்கள் கட்டுதல், கல்வி கற்கும் சூழலை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘முதல் கட்டமாக கடந்த அக்டோபரில் 2.50 கோடி ரிங்கெட்கள் அரசு பள்ளி அந்தஸ்தில் உள்ள 150 தமிழ் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான நிதி 2017 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடி ரிங்கேட் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
2ம் கட்டமாக 530 பள்ளிகளுக்கு கட்டுமான அனுமதி கடிதம், சிறப்பு ஒதுக்கீடு ஆகியவை ஏப்ரல் 2ம் தேதி அன்று வழங்கப்படும். மீதமுள்ள 2.50 கோடி ரிங்கெட்கள் 284 பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் 251 அரசு உதவி பெறும் பள்ளிகள், 33 அரசு பள்ளிகளாகும். ஏப்ரல் மாதம் முதல் மேம்பாட்டு பணிகள் தொடங்கும்.
இவை 13வது பொதுத் தேர்தலில் பரிசான் தேசிய அரசின் வாக்குறுதியாகும். புதிதாக 6 பள்ளிகள் தொடங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்திருந்தார். இது பயா பேஸர், கேதாவில் தாமன் கேலாடி, பெராக்கில் ஹீவுட்ல சுங்காய் சிபுத், செலாங்கரில் தமான், சென்தோசால க்ளாங், பந்தர் மக்கோதா, ஹூலு லங்கத் மற்றும் தமான் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளது.
மேலும், 80 பள்ளிகளுக்கு வழங்கும் வகையில் பிரதமர் 5 கோடி ரிங்கெட்களை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.