நேற்று இரவு நண்பர் பொம்பூர் பாண்டியன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை நண்பர்கள் இரண்டு கார்களில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். நள்ளிரவைத் தாண்டி சுமார் இரண்டு மணியளவில் விக்கிரவாண்டி டோல் கேட்டைக் கடந்ததும், பண்ருட்டி செல்லும் சாலை சந்திப்பில் ஒரு அரசு விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளாகி நின்றிருந்தது. பேருந்தின் பின்புறம் ஏதோ ஒரு வாகனம் மோதியதில், பேருந்தின் பின்பக்கம் நசுங்கிப் போயிருந்தது.
ஓரிரு நிமிடங்கள் முன்புதான் விபத்து நடந்திருக்கக்கூடும். நான், ஆனந்தன் மெய்யப்பன், வைகோ கார்த்திக், ராஜ் மோகன் ஆகியோர் எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடினோம். பின்பக்கம் சிலர் நசுங்கிய பாகத்தின் வழியே சிலரை மீட்க முயன்றுகொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் பேருந்தின் கடைசி இருக்கையில் நசுங்கிய பகுதியில் சிலர் சிக்கி இருப்பது தெரிந்தது. உடனடியாக பேருந்தின் உள்ளே ஏறி ஓடினேன். பேருந்தின் உள்ளே முன் பகுதி இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் பின்பக்கம் இருந்தவர்களைப் பற்றி எவ்விதக் கவலையும் இன்றி அமர்ந்திருந்தனர். சிலர் வேறு பேருந்துக்கு மாறவேண்டுமே என்ற கவலையில் தங்கள் பைகளை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை எல்லாம் விலக்கிக் கொண்டு கடைசி இருக்கையை நோக்கி ஓடினேன். ஒரு முதியவரின் கால் கட்டை விரல் நசுங்கி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் மனைவியின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் இறங்கச் சொல்லிவிட்டு இன்னும் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று பார்க்க உள்ளே நுழைந்தபோது, ஏற்கனவே இரு காவல்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இருந்தார்கள்.
கடைசி வரிசையின் மூலையில், ஓரத்து இருக்கையில் சுமார் ஐந்து வயதுள்ள ஒரு சிறுவன் நசுங்கிய இருக்கைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு அழுது கொண்டிருந்தான். அவனது கால்கள் கடைசி வரிசைக்கும் அதற்கு முன் வரிசைக்குமான இருக்கைகளுக்கு இடையில் இறுக்கமாக சிக்கிக் கொண்டிருந்தன. “என் கால் சிக்கிக்குச்சு, ரொம்ப வலிக்குது” என்று சொல்லி அந்தக் குழந்தை கதறிக் கொண்டிருந்தான்.
அவனைப் பற்றிய கவலை ஏதுமின்றி சில வரிசைகள் முன்னால் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்ததைக் காண முடிந்தது. எனக்கோ அவன் அழுகுரல் கேட்டு இதயம் இரயில் வண்டியைப் போல சத்தத்தோடு துடித்துக் கொண்டிருந்தது. கடைசிக்கு முன்வரிசையில் ஒரு பெண்மணி தனது கைக்குழந்தையோடு அமர்ந்திருந்தார். அவர் நகர்ந்தால் அந்த இருக்கையை வளைத்து சிறுவனை மீட்பது எளிதாக இருக்கும் என்பதால் அவரை நகரச் சொன்னோம்.
அந்தப் பெண்ணோ சிக்கிக் கொண்டிருந்த சிறுவனைப் பற்றிய கவலை ஏதுமின்றி எழுந்து தனது பையை எடுத்து பத்திரப் படுத்திக்கொண்டிருந்தார். பின்னர் அவரை விரைந்து நகர்த்திவிட்டு, நானும் அந்தக் காவல்துறை நண்பர்களும் சேர்ந்து முன் வரிசை இருக்கையை மிகுந்த சிரமத்திற்கிடையே சிறிதளவு வளைத்து சிறிய இடைவெளியை உண்டாக்கினோம். பின்னர் அந்தக் குழந்தையை எனது இரு கைகளாலும் அள்ளி எடுத்துத் தூக்கினேன். பின்னர் பேருந்தின் கீழே அவனைத் தூக்கி வந்து நிற்கச் சொன்னேன். வலியால் அழுதாலும் அவனால் நிற்க முடிந்தது. அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அவன் கால் சட்டையக் கழற்றி எலும்பு முறிவு ஏதும் இல்லை என உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே நிம்மதியானேன். அவனது பெற்றோர் யார் எனத் தேடியபோது அடிபட்ட அந்த முதியோர்கள்தான் அவனது தாத்தா, பாட்டி என்றார்கள்.
இதற்கிடையே விபத்து நடந்த இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வண்டி பேருந்தின் பின்புறம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தார். பின்னர் அவரை அழைத்து ஆம்புலன்ஸை எடுத்து வரச் செய்து அந்தக் குடும்பத்தை ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டு, விழுப்புரம் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம்.
“வாடிய பயிரைக் கண்டபோதேல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். ஆனால் ஒரு பிஞ்சுக் குழந்தையை மீட்கக் கூட மனமின்றி வேடிக்கை பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது? சிறுவனை மீட்பது பற்றிய கவலை ஏதுமின்றி, தனது உடைமைகளைப் பத்திரப் படுத்த முனைந்த அந்தப் பெண்மணியை என்ன சொல்வது? பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டு சுழலும் நமது மக்களிடையே மனம் சுத்தமாக மரத்து விட்டதா? சக மனிதன் துன்பத்தை நேரில் கண்டும்கூட மனம் துடிக்கவில்லை என்றால், ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கா இவர்கள் கொதித்து எழப் போகிறார்கள்? என்றைக்கு மாறும் இந்தச் சமூகம்? எண்ணிப் பார்த்தால் வேதனையே விடையாகக் கிடைக்கிறது.
துரிதமாகச் செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய அந்தக் காவல்துறையின் இளைஞர்களை மனதாரப் பாராட்டுகிறேன். பதட்டத்தில் அவர்கள் பெயரைக் கூடக் கேட்க மறந்துவிட்டேன். அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். Nallu R Lingam https://www.facebook.com/lingamnallu