மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்குள்ள 43,000 கிராமங்களில் சுமார் 27,723 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 75 அணைகளில் 54 அணைகளில் முற்றிலுமாக நீர் வற்றிவிட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், பாலிவுட் நட்சத்திரங்களில் பலரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர்கள் அமிர்கான், நானா படேகர் ஆகியோர் சமீபத்தில் நிதி உதவி அளித்தனர். அதேபோல, நடிகர் அக்ஷய் குமார் மகாராஷ்டிரா மாநில அரசின் ஜல்யுக்த் ஷிவர் அபியான் எனும் அமைப்பிற்கு .50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். வறட்சியால் வாடும் கிராமங்களில் நீர் நிலைகளை உருவாக்குவது, குளம் அமைப்பது போன்ற பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது.
தற்கொலை செய்து கொண்ட 180 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அக்ஷய் குமார் ஏற்கெனவே ரூ.90 லட்சம் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.