ஒரு நாள், ஒரு மனிதன் கடவுளிடம் சென்று “கடவுளே, என்னுடைய மதிப்பு என்ன?” என்று கேட்டான். அதற்கு கடவுளும் ஒரு சிவப்பு கல்லைக் கொடுத்து , “இதன் விலையை அறிந்து வா; ஆனால் எந்தக் காரணத்தைக்கொண்டும் இதை விற்றுவிடாதே” என்று கூறினார்.
முதலில் அந்த கல்லை ஒரு பழ வியாபாரியிடம் காண்பித்து, “இந்த கல்லின் வில்லை என்ன என்று தெரியுமா?” எனக்கேட்டான். அந்த வியாபாரி “இந்த கல்லுக்கு 12 ஆரஞ்சு பழம் தருகிறேன்” என்றார். “வேண்டாம்” என்று கூறி அந்தக்கல்லை ஒரு காய்கறி வியாபாரியிடம் காண்பித்து “இந்த கல்லின் வில்லை தெரியுமா?” எனக்கேட்டான். அந்த வியாபாரி “ஒரு மூட்டை உருளைக்கிழங்கு தருகிறேன்” என்றார். “வேண்டாம், வேண்டாம் ; என்னால் இப்பொழுது இதை விற்கமுடியாது” என்று கூறி அந்தக்கல்லை ஒரு நகை வியாபாரியிடம் காண்பித்து “இதன் வில்லை தெரியுமா?” எனக்கேட்டான். அதற்க்கு அந்த நகை வியாபாரி” இதற்கு ஐம்பது லட்சம் தருகிறேன்” என்றான். “வேண்டாம், என்னால் இந்தக்கல்லை விற்கமுடியாது” என்று கூறி எழுந்த அவனிடம் “பொறு, 2 கோடி ரூபாய் தருகிறேன். எனக்கே இந்த கல்லைக் கொடுத்துவிடு” என்றான். மீண்டும் இல்லை என்று கூறி அங்கிருந்து கிழம்பினான்.
கடைசியாக அந்தக்கல்லை ஒரு பொக்கிஷ கற்கள் வாங்கும் ஒருவரிடம் காண்பித்து “இந்த கல்லின் விலை தெரியுமா?” எனக்கேட்டான். அந்த கல்லை ஒரு ரத்ன கம்பளத்தில் வைத்து “இது ஒரு பொக்கிஷக் கல், இதன் மதிப்பபைக் கணக்கிடவே முடியாது … இந்த உலகத்தை விற்றாலும் இதற்கு எந்த விலையும் நிர்ணயிக்க முடியாது” என்றார்.
கல்லை திரும்ப பெற்றுக்கொண்டு அந்த மனிதன் கடவுளிடம் வந்து நடந்தவற்றைக் கூறினான். கடவுளும் புன்முறுவலோடு “ஆம், ஒரு மனிதனின் மதிப்பும் அதைப்போலவே தான். எப்படிப்பட்ட பொக்கிஷமாக இருந்தாலும், பார்பவர்கள் உன்னைப்பற்றி வைத்திருக்கும் தகவல், மற்றும் உன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் படி தான் உன்னை மதிப்பிடுவார்கள்.” “மற்றவர் உன்னைப்பற்றி எப்படி மதிப்பிட்டாலும், நான் உன்னை ஒரு பொக்கிஷமாகத்தான் மதிப்பிடுகிறேன்” என்றார் கடவுள்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரே நிகர். உங்கள் வாழ்க்கையை வேறோருவரைக்கொண்டு பூர்த்திசெய்ய முடியாது. இறைவன் கொடுத்த இந்த அழகான வாழ்கையை முழுமையாக பயன்படுத்தி தமக்காகவும் தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் இனிதே வாழ்ந்துகாட்டுங்கள்.
-ஆதித்யா