கேரள ஆலயத்திருவிழா தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தோர் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரக்கல் அறிக்கையில்,
’’இன்று அதிகாலை ஐந்து மணிக்குத் தொலைக்காட்சியில் கண்ட காட்சியும் செய்தியும் என்னைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில், அதிகாலை 3.30 மணி அளவில் பட்டாசுகள் வெடித்துத் தீப்பற்றியது; 90 பேர் நெருப்பில் கருகி மாண்டனர்; 300 பேர் படுகாயம் அடைந்தனர்; ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நெருப்பு பரவியது; 500 வீடுகள் எரிந்து சாம்பலாகி இருக்கின்றன என்ற செய்தியைக் கேட்டபோது, அங்கே நடைபெற்ற பயங்கரத்தை எண்ணி மனம் பதறியது.
கேரள முதல் அமைச்சர் உம்மண் சாண்டி, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பக்திப் பரவசத்துடன், ஆயிரம் கனவுகளுடன் அம்மனை வேண்டி வழிபட்டு, கோலாகலமாகக் காட்சி அளித்த திருவிழாவில் மனதைப் பறிகொடுத்து மகிழ்ந்த வேளையில், குண்டுகள் விழுவது போல் பட்டாசுகள் வெடித்து நெருப்பில் சிக்கி அவர்களின் உடல் கருக, இதயம் அதிர்ச்சியில் உறைய, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அக்கினி ஜூவாலைகளுக்குள் அலறக் கூட முடியாமல் அதிர்ச்சியில் தவித்துத் துடிதுடிப்பதை மனக்கண்ணால் கற்பனை செய்யும்போது நமக்கு மனம் பதறுகிறது.
பொதுவாக திருவிழாக்களில், மக்கள் குவிகின்ற இடங்களுக்கு அருகில், சக்தி வாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை, இப்போதாவது அனைவரும் உணர வேண்டும். தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், தலைவர்களை வரவேற்கின்ற வகையில் பட்டாசுகள் வெடிப்பதை அனைத்துக் கட்சியினரும் தவிர்க்க வேண்டுகிறேன்.
உயிர் இழந்தவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பலத்த காயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற, அரசும் மருத்துவமனைகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்!’’