தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மத்திய அரசுக்கு உறைக்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மீண்டும் 20 சுங்க சாவடிகளில் 10% கட்டண உயர்வை அமல்படுத்த மத்திய அரசு அனுமதித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள 4,974 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான். அதற்குத்தான் அந்த ஆணையமே அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு நாட்டின் சாலையை பராமரிப்பது என்பது அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று. ஆனால் அந்த அடிப்படை கடமையைக் கூட பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுக்காமல் யாரோ சில தனியாரிடம் ‘சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் சாலையை பராமரிக்கிறோம் என்ற பெயரில் ‘சுங்க கட்டணம்’ ஒன்றை வசூலிக்கின்றனர்.
சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள், மின்விளக்கு வசதி, கழிப்பறை, ஆம்புலன்ஸ், அவசர தொலைபேசி, அவசர சிகிச்சை என முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருப்பதுதான் சாலை பராமரிப்பு.
ஆனால் சாலையையே பராமரிப்பதும் இல்லை என்கிற போது வேறு அடிப்படை வசதிகளை எங்கே செய்யப் போகிறார்கள்.. அதே நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களாக ஆங்காங்கே சுங்க கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்..
வெளிநாடுகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டுதான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் இங்கே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்க மறுக்கிறது இந்த சுங்கக் கட்டண கொள்ளை கும்பல்
.
தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.
ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக சுங்க சாவடி கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டு வருகின்றன. இப்படி இதுவரையில் வசூலிக்கப்பட்டது எத்தனை லட்சம் கோடி ரூபாய்? எதற்காக அந்த பணம் செலவழிக்கப்பட்டது? செலவழிக்கப்பட்டது எவ்வளவு தொகை? என்ற புள்ளி விவரம் மத்திய அரசிடம் இருக்கிறதா? இது தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.
சுங்க சாவடி கட்டணமே படுபயங்கரமான வழிப்பறி கொள்ளை என்பதால்தான் தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்த பகல் கொள்ளையை கண்டித்து 41 சுங்க சாவடிகளையும் முற்றுகையிட்டு அறவே அகற்றும் போராட்டங்களை நடத்தியது. ஆனாலும் மத்திய அரசு அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இதோ ஏப்ரல் 1-ந் தேதி முதல் மீண்டும் 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சூரப்பட்டு, வானகரம், கிருஷ்ணகிரி, வேலன்செட்டியூர், சாலைப்புதுார், பள்ளிக்கொண்டா, வாணியம்பாடி, எட்டூர்வட்டம், கப்பலுார், நாங்குனேரி, பரனுார், ஆத்துார், புதுக்கோட்டை, பட்டரை பெரும்புதுார், சிட்டம்பட்டி, பூதக்குடி, லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, நெமிலி, சென்னசமுத்திரம் ஆகிய சுங்கச்சாவடிகளில்தான் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வை அமல்படுத்தப் போகிறது.
அதுவும் இலகுரக வாகனங்களுக்கு 25 ரூபாய் முதல், 75 ரூபாய்; சரக்கு வாகனங்களுக்கு 300 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் கூடுதலாக 10% கட்டண உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
இந்த கட்டணங்களால் சுங்கச் சாவடிகளை பயன்படுத்துகிற ஏழை எளிய மக்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்துக் கொள்வதுடன் சரக்கு வாகனங்கள் வாடகை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணைமுட்டி நிற்கும் விலைவாசி உயர்வும் பல மடங்கு அதிகரிக்க போகிறது.
சுங்கச் சாவடி கட்டண முறையையே கூடாது என்று அவற்றை அகற்றுகிற போராட்டத்தை நடத்தியும் மத்திய அரசு அலட்சியத்துடன் மீண்டும் மீண்டும் கட்டண உயர்வுக்கு அனுமதி கொடுத்து வருகிறது. ஆக மத்திய அரசு அலறும் வகையிலான போராட்டங்களை நடத்தினால்தான் உறைக்குமா? அப்படியானால் அத்தகைய போராட்டங்களையும் நடத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தயார் எனவும் எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகையால் சுங்க சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று ஒட்டுமொத்தமாக சுங்க சாவடிகளை அடியோடு அகற்றிட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது’’என்று கூறியுள்ளார்.