images (7)

பெங்களூரில் இருந்து வந்திருந்த தோழியுடன் அந்த பிரம்மாண்டமான மாலுக்கு போயிருந்தேன். சர்ச்சைக்குரிய கட்டிடம் என்பதோ, பொருட்கள் எல்லாம் டைனோசர் விலை என்பததோ யாருக்கும் பொருட்டாக இல்லை. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம்!

தோழிதான் பர்ச்சேஸ் செய்தார். ஒருவழியாக முடித்து காஃபி ஷாப் வந்தோம். உட்கார்ந்து ஆர்டர் கொடுக்கும் நேரத்தில்தான் கவனித்தேன்.. எதிரே கொக்கு சார் அமர்ந்திருந்தார்.

மூத்த பத்திரிகையாளர். எந்த இடத்திலும் நுழைந்து வரக்கூடிய செல்வாக்கு மிக்கவர். இப்போது டில்லியில் செட்டில் ஆகிவிட்டார். அவரது உயரத்தைக் கொண்டு, “கொக்கு” என்ற பட்டப்பெயர் வைக்கப்படவில்லை. காத்திருந்து, சரியான – முக்கியமான செய்தியை கேட்ச் செய்துவிடுவார். அதற்காகத்தான் அந்த பெயர்.

“கொக்கு சார்.. “ என்று என்னை அறியாமல் கத்திவிட்டேன். அமைதியான காஃபி ஷாப்பில் பலரும் என்னை பார்க்க… தோழி வேறு தோளில் இடிக்க.. சங்கோஜமாகிவிட்டது.

சரி, அதை விடுவோம். என் குரலைக்கேட்டு திரும்பிய கொக்கு சார், என்னைப் பார்த்ததும் உற்சாகமாகிவிட்டார்: “ஹாய்.. எப்படி இருக்கே..” என்று அருகில் வந்தார்.

“என்ன திடீர் விசிட்டா..” என்றேன்.

“ஆமாம்பா.. இன்னைக்கு காலையில கிளம்பி வந்தேன்…” என்றவர் கொஞ்ச நேரம் பொதுவாக பேசினார். அப்படியே பேச்சு, சிம்பு தலைமறைவு விவகாரத்துக்குத் திரும்பியது.

கொக்கு சார், “சிம்பு தப்புக்கு மேல தப்பு பண்றார்… வெளிப்படையா மன்னிப்பு கேட்டு, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கலாம்” என்றார். நானும் ஆமோதித்தேன்.

பிறகு சட்டென, “இப்போ சிம்பு தலைமறைவா இருக்கிற மாதிரி, அவங்க அப்பா டி.ராஜேந்தரும் ஒருமுறை போலீஸுக்கு பயந்து தலைமறைவா இருந்தார் தெரியுமா..” என்றார்.

நான் ஆச்சரியமாக, “அப்படியா.. அதென்ன மேட்டர்?” என்றேன்.

கொக்கு சார் சொல்ல ஆரம்பித்தார்

“1986 ம் வருசம் அந்த சம்பவம் நடந்தது. அப்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலம். டி.ராஜேந்தர், தி.மு.க.வுல ஆக்டிவா இருந்தார். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மேடைகள்ல விளாசிவந்த நேரம்.

ஃபோட்டோ பிரிண்ட்கள் டி.ராஜேந்தருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதை ஆதங்கத்துடன் கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார். அவர் ஏதோ சமாதானம் சொல்லியிருக்கிறார். இந்த பேச்சுக்கள், கொஞ்சம் கொஞ்சமாக தடிக்க.. ஒரு கட்டத்தில் ஆவேச ராஜேந்தரனாக மாறி, வார்த்தைகளில் பொளந்து கட்டிவிட்டார்.

ராமண்ணா
ராமண்ணா

அது மட்டுமல்ல… “டேய்.. சினிமால மட்டுமில்ல நிஜத்திலும் கண்ணாடிய உடைப்பான் இந்த டி.ஆர்.. இதோ இப்போ பார்…” என்று டயலாக் அடித்திருக்கிறார் டி.ராஜேந்தர். பல சமயங்களில் நிஜத்திலும் இப்படித்தான் பேசுவார் அவர்.

கடைக்காரர் பயந்து போய் நிற்க… தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைவிட்டு ஆவேசமாக எழுந்த ராஜேந்தர், அந்த நாற்காலியை எடுத்து கடை வாசல் பக்கம் இருந்த கண்ணாடியை அதிரடியாய் அடித்து உடைக்க ஆரம்பித்தார்! தன் ஆத்திரம் தீரும்வரை அடித்து உடைத்து துவம்சம் செய்தவர், அதே வேகத்தில் விறுவிறுவென தனது காரில் ஏறி பறந்துவிட்டார்!

விக்கித்துப்போன கடை ஓனர், காவல்துறையில் புகார் செய்துவிட்டார்.

அப்போது காவல்துறை உயரதிகாரியாக பொறுப்பு வகித்தவருக்கு டி.ராஜேந்தர் மீது என்ன கோபமோ.. வலைவீசி பிடிக்க உத்தரவிட்டார் தனது கீழ் அதிகாரிகளுக்கு. ஒருவேளை, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலிதாவை திமுக மேடைகளில் டி.ஆர். விளாசி வந்தார் அல்லவா.. அதனால்கூட அந்த காவல் அதிகாரிக்கு கோபம் இருந்திருக்கலாம். ஏனென்றால் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி அவர்.

போலீஸ் தேட ஆரம்பிக்க… பயந்துபோய்விட்டார் டி.ராஜேந்தர். தனக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் ஒளிந்துகொண்டார்.

இங்கே போலீஸ் தேட… அவரோ பதுங்கு குழி(!)யில் இருந்து வெளியே வரவில்லை.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, “நாடறிந்த சினிமா பிரபலம், இப்படி சில்லறை பிரச்சினைகளில் ஈடுபட்டு ஓடி ஒளிவது நன்றாகவா இருக்கிறது..” என்று வருத்தத்துடன் செய்தி அனுப்பினார்.

அதன் பிறகு முன்ஜாமீன் பெற்றார் டி.ராஜேந்தர். பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தார். அதோடு, அந்த ஸ்டூடியோகாரரிடம் சமரசம் பேசி, நட்ட ஈடு கொடுத்து அந்த கேஸில் இருந்து வெளியே வந்தார்..” – கொக்கு சார் சொல்லி முடிக்க.. ஏதோ சினிமா கதை கேட்ட மாதிரி இருந்தது எனக்கு.

“தகவலுக்கு நன்றி சார்… கிளம்பறேன்” என்று அவரிடமிருந்து விடைபெற்றேன்.

உடன் வந்த தோழி, இன்னும் பர்சேஸ் இருப்பதாக சொல்ல… “ஊஹூம்… நீ பர்சேஸ் பண்ணு.. நான் இந்த மேட்டரை அப்லோட் பண்ணணும்” என்று என் முதுகுப்பையில் இருந்த மினி லேப்டாப்பை எடுத்தேன்.    தோழியின் முறைப்பைப் பொருட்படுத்தாமல், இதோ உங்களுக்காக டைப்பிக்கொண்டிருக்கிறேன்!