ranil modi new

டில்லி:

லங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக   2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்  குறித்து, ஜெனீவாவில் நடக்கும்  ஐ.நா., மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று இந்தாயா வரும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசவிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில், 2009ம் ஆண்டு  நடந்த போரின்போது, எண்ணற்ற மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக, ஐ.நா., மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்து, விசாரணை அறிக்கையை தயாரித்துள்ளது. இலங்கை அரசின் கருத்தை கேட்பதற்காக, அந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைக் கமிஷன் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த, மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ உரிய நடவடிக்கைகளை  இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்கா சார்பில், தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.    மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த அனுமதிப்பதை ஆதரித்தும் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை,  அக் கட்சிகள் ஏற்கவில்லை. தமிழகத்திலும், அமெரிக்க அரசின் போக்கை எதிர்த்து பல அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தின.

இந்த நிலையில்  இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இதற்கு முன், 2012 – 2013 ஆண்டுகளில், இலங்கை விவகாரத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களை, இந்தியா ஆதரித்து ஓட்டளித்தது. 2014ல், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா ஓட்டளிக்காமல் ஒதுங்கியது.

மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வரும்  இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்துப் பேசும் போது, “இந்த முறையில் இலங்கைக்கு ஆதரவா இந்தியா நிலைபாடு எடுக்க  வேண்டும்”  என்று கோருவார் என்று தெரிகிறது.