கொழும்பு:
“விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்சேவோ கோத்தாபய ராஜபக்சேவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ போர்க்குற்றங்களில், ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அந்த போரை முன்னின்று நடத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன் சேகா, பல விசயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் பேசியதில் இருந்து…
“தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மகிந்த ராஜபக்சே மாறிவிட்டார் என்று நான் நினைக்கவில்லை.
பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தபோது, என் அருகில் அமர்ந்திருந்த ராஜபக்சே என்னிடம் பேச முயன்றார். ஆனால், நான் அவரை அவர் பக்கம் திரும்பாலேயே இருந்தேன். அப்படியும், “எப்படி சரத் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “பிரச்சினை ஏதுமில்ல” என்று சுருக்கமாக சொல்லிவிட்டு அவர் பக்கத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.
ஏனென்றால் மகிந்த ராஜபக்சே ஒரு பாம்பு. ஏற்கெனவே அது ஒருமுறை என்னை தீண்டியது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒருமுறை கைவிடுவது தவறு.
நான் பதவி வகித்த காலத்தில் வெள்ளை வேனில் பலரும் கடத்தப்பட்டதாக சொல்லப்படுவது தவறு. அப்படி ஏதும் நடக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் கிடையாது. நான் ஓய்வு பெற்ற பிறகு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட நிகழ்வு நடந்தது.
குமரன் பத்மநாதன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என்று ஆட்சியாளர்களில் சிலர் சொல்லத்தலைப்பட்டிருக்கிறார்கள். அப்படி சொல்பவர்களும் பயங்கரவாதிகள்தான். ஆகவே அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது வழிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டது என அமெரிக்கா கருதியதால் தான், உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
விசாரணை நடத்தப்படுவது மிகவும் அவசியம். எனக்கு எதிராக விசாரணை நடத்தினால் நான் அதனை ஏற்றுக்கொண்டு விசாரணையை எதிர்கொள்வேன்.
கோத்தாபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அல்லது உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்றும் பொன் சேகா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை தலைமை ஏற்று நடத்தியவரே அப்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.