காஞ்சிபுரம் அருகே வாரணவாசியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று திங்கள்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியபோது, ‘’பலரும் மதுவிலக்கு குறித்துப் பேசுகின்றனர். ஆனால் கருணாநிதிக்கோ, திமுகவுக்கோ மதுவிலக்கு குறித்துப் பேச அருகதையில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் திமுக, தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்று ஏன் அறிவிக்கவில்லை?
பூரண என்ற வார்த்தையை தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிடவில்லை. மதுவிலக்குக்காக சட்டம் கொண்டு வருவோம். டாஸ்மாக் கடையை மூடுவோம் என்றுதான் கூறியுள்ளனர். கருணாநிதி மீண்டும் தனியார் மூலம் மது விற்பனையைக் கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்.
ஒரு தலைமுறைக்கு மதுவை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சேரும். சட்டப்பேரவையில் மது ஒழிப்பு தொடர்பாக பேசும்போதும் கூட, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதைவிட கால ஓட்டத்துக்கு தகுந்தாற்போல அதிகம் பாதிப்பில்லாத மதுவை வழங்க வேண்டும் என்றே கருணாநிதி கூறியுள்ளார்’’ என்று குறிப்பிட்டார்.