பிரபாகரனு் நானும்: 7

 

freedom_birds

 

ழப் பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்கள் படும் துயரங்களை வீடியோ காட்சிகளாக எடுத்தேன். ஏறத்தாழ 33 மணிநேரத்திற்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோப் படங்களின் முக்கியப் பகுதிகள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கப்பட்டுத் தமிழ்நாடெங்கும் காட்டப்பட்டது.

இந்த படத்தைக் காட்டக்கூடது என தமிழக அரசு தடைவிதித்தது. அதையும் மீறி இந்தப் படம் எல்லா இடங்களிலும் காட்டப்பட்டது. இந்தியாவின் பிற பகுதியிலும் ஆங்கில விளக்கத்தோடு இப்படம் காட்டப்பட்டது. டில்லியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும்,இந்திய நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இப்படம் காண்பிக்கப்பட்ட போதுதான் அவர்கள் பல உண்மைகளை அறிந்து கொண்டனர்.

அகில இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் இப்படத்தைப் பார்த்தபிறகு, “விடுதலைப்புலியினரைச் சாதாரணப் பயங்கரவாதிகள் என்று நான் நினைத்தேன்..இப்படத்தைப் பார்த்த பிறகு அது எவ்வளவு தவறான எண்ணம் என்பது தெரிகிறது. நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவத்தைப் போலவே இவர்களும் ஒரு விடுதலை ராணுவத்தினர் என்பதைப் புரிந்து கொண்டேன்’’என்றார்.

 

25-prabhakaran-nedumaran300

 

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த வீடியோ படம் காட்டப்பட்டது. இதன் மூலம் ஈழமக்கள் படும் பயங்கரங்களையும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகளையும் உலகம் தெரிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டது. இவற்றுக்கு நான் சிறு கருவியாகப் பயன்பட்டேன் என்பதில் பெருமைப்படுகிறேன். இதற்கான திட்டத்தை தீட்டி அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெருமை பிரபாகரனுக்கும் அவரது தோழர்களுக்கும் உரியது.

ஆரம்ப காலத்தில்… அதாவது 1970களில் தமிழகத்திற்கு போராளிகள் வந்தபோது அவர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்தவர்களில் முக்கியமானவர் செஞ்சி இராமச்சந்திரன்.

பிற்காலத்தில் மத்திய இணையமைச்சராக விளங்கிய இவர் அப்போது தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஈழத்தில் தமிழ் மாணவர் பேரவையை நிறுவிய சத்தியசீலன் சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகத்திற்கு வந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் செஞ்சி இராமச்சந்திரன்தான். சத்தியசீலன் மூலமாக மற்ற போராளிகளும் செஞ்சியாருக்கு அறிமுகமானார்கள். அனைவருக்குமே அவர் தேவையான உதவிகளைச் செய்தார். பிரபாகரன், மற்றும் புலிகள் அவர் உதவியை நாடியபோதும் தயங்காமல் செய்தார்.

அதுமட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள தமது அறையைப் புலிகளுக்கு அரசியல் வகுப்பு நடத்துவதற்காக கொடுத்து உதவினார். அந்த அறையில் தான் புலிகளுக்குப் பாலசிங்கம் வகுப்புகளை நடத்தினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

தமிழீழ விடுதலைப் போரட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் உரிய பங்கினைப் பெறவேண்டுமென்று பிரபாகரன் விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தீட்டினார். பெண்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்க அவர் முடிவு செய்தார். அதை செயல்படுத்தவும் செய்தார்.

புலிகளின் பெண்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றினைப் பிரபாகனுடன் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆண்களைப் போலவே சகல பயிற்சிகளையும் இப்பெண்கள் பெறுவதைப் பார்த்து நான் வியந்தேன்.

சகல நவீன ஆயுதங்களையும் அவர்கள் எவ்வளவு இலாவமாகக் கையாளுகிறார்கள் என்பதைப் பார்த்து பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். மருத்துவம், பிரச்சாரம் போன்ற பணிகளுக்கே பெண்கள் ஏற்றவர்கள் என்ற நிலையைப் பிரபாகரன் அடியோடு மாற்றியிருந்தார். விடுதலை வேட்கையும் உரிமை உணர்வும் கொண்ட வீராங்கனைகளை அவர் உருவாக்கியுள்ள விதம் வியக்கவைத்தது.

சிங்கள இராணுவத்துடன் ஏற்ப்பட்ட மோதலில் தங்களின் பெற்றோரை, அண்ணன்மாரை, கணவரை இழந்த பெண்கள் அவர்கள். எனவே, அவர்களின் உள்ளங்கள் வைரம் பாய்ந்திருக்கின்றன. அவர்களுடன் நான் பேசியபோது அவர்களின் மனதிடத்தையும் துணிவையும் கண்டு வியந்தேன். பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

(இன்னும் சொல்கிறேன்..)