புதுடெல்லி: நாட்டிலுள்ள புலிகள் கணக்கெடுப்பு செயல்பாட்டின் மூலம் புலிகளின் எண்ணிக்கை கூடியுள்ள விபரங்கள் வெளியானாலும், புலிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் பல நம்பகத்தன்மையற்றவைகளாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழு புலிகளின் புகைப்படங்களில் ஒரு புகைப்படம் போலியானது என்ற விபரம் வெளியாகியுள்ளது. நாட்டில் புலிகளின் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்தமுறை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நாடெங்கிலும் மொத்தம் 2967 புலிகள் உள்ளதாய் கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றில், 2462 புலிகள் கேமராக்களில் சிக்கியுள்ளன என்று கூறப்படுகிறது. இது மொத்த எண்ணிக்கையில் 83%. கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பில் மொத்தம் 2226 புலிகள் வாழ்வதாக விபரங்கள் வெளியாகின.
அதில், கேமராக்களில் சிக்கியவை 1635. மொத்த எண்ணிக்கையில் இது 73%. ஆனால் இந்தப் புகைப்படங்கள் குறித்த நம்பகத்தன்மைதான் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரே புலி மற்றொரு புலியாக அடையாளம் காட்டப்படுகிறது என்ற புகார் கிளம்பியுள்ளது.
இந்திய வனவிலங்கு கல்வி நிறுவனம் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்கின்றன. அரசின் பல்வேறுகட்ட நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.