விசாகப்பட்டிணம்: ஒடிசா தலைநகர் புவனேஷ்வரை தலைமையிடமாகக் கொண்டு அமைந்த வால்டேர் ரயில்வே டிவிஷனை இரண்டாகப் பிரித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம், சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் இணைந்து நடக்கவுள்ள ஆந்திர மாநிலத்தில் அரசியல் அனல் அதிகரித்துள்ளது.

அந்தப் பகுதியின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுவது குறித்த அறிவிப்பு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலால் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பை, சம்பந்தப்பட்ட ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் அரசுகள் புறக்கணித்துள்ளன.

விசாகப்பட்டிணத்தை தலைமையிடமாகக் கொண்டு அமையவுள்ள இந்தப் புதிய மண்டலம் ‘தெற்கு கடற்கரை ரயில்வே(SCoR) என்று அழைக்கப்பட்டு, அதில், குண்டக்கல், குண்டூர் மற்றும் விஜயவாடா ரயில்வே டிவிஷன்கள் இணைக்கப்படும். இதர பகுதிகள், ஒடிசாவின் ரயாகடாவை தலைமையிடமாக கொண்ட ரயில்வே மண்டலத்தில் சேர்க்கப்படும். இது, ‍ஒடிசாவில் அமைந்த கிழக்கு கடற்கரை ரயில்வே டிவிஷனில் உள்ளடங்கும்.

வால்டேர் ரயில்வே டிவிஷனின் தற்போதைய மொத்த வருமானம், ரூ.7,053 கோடியாகும். இதில் சரக்குகள் மூலமாக ரூ.6,515 கோடிகளும், பயணிகள் மூலமாக ரூ.536 கோடிகளும் கிடைக்கப்பெறுகின்றன. இந்தப் பெரிய தொகை தற்போது பிளவுபடுவதுதான், இருமாநில ஆளுங்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு காரணம்.

ஒடிசாவில் அமையவுள்ள ரயகடா ரயில்வே பிராந்தியத்தில், ஆந்திராவின் அதிக வருமானம் கொண்ட விஸியநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகள் இணையவுள்ளன. அதாவது, ரூ.6,500 கோடி வருவாய், ஒடிசாவின் கிழக்கு கடற்கரை ரயில்வேக்கு சென்றுவிடும். வெறும் ரூ.500 கோடி வருமானம்தான், ஆந்திராவில் விசாகப்பட்டிணத்தை தலைமையிடமாகக் கொண்டு அமையவுள்ள பிரிவுக்கு வந்துசேரும். இது ஆந்திராவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று ஆளும் தெலுங்குதேசம் கட்சி தனது கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

ஒடிசா அரசோ, இந்த அறிவிப்பு, ஒடிசா மாநில ரயில்வேக்கு ஒரு சாவுமணி என்று மிகக் கடுமையாக சாடியுள்ளது. வால்டேர் டிவிஷனின் தலைமையகம் இதுவரை ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து வருகிறது. ஆனால், தற்போது அதன் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, விசாகப்பட்டிணத்திற்கு கொண்டு செல்லப்படுவதன் மூலம், ஒடிசாவின் ரயில்வே மேம்பாட்டில் மிகப்பெரிய தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு போர்க்கொடி தூக்கியுள்ளது.

அதேசமயம், விசாகப்பட்டிணம் புதிய தலைமையிடமாக மாறுவதால், அங்கே புதிதாக ஒரு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய அலுவலகம் (Railway Recruitment Board Office) அமைக்கப்படும். அதன்மூலம், ரயில்வே சார்ந்த பணிகளுக்கான விண்ணப்பித்தல் மற்றும் நேர்முகத்தேர்வு உள்ளிட்டவைகளுக்காக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதுநாள் வரை புவனேஷ்வர் சென்றுகொண்டிருந்தார்கள். இனிமேல், அவர்கள் தங்களின் சொந்த மாநிலத்திலேயே அவற்றை மேற்கொள்ளலாம் என்ற சாதக அம்சமும் பேசப்படுகிறது.