0 raga
 
பிரஸல்ஸ்;
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், மற்றொரு தீவிரவாதி சம்பந்தப்பட்டுஇருப்பது தெரியவந்திருக்கிறது.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில், விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில், சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில், 31 பேர் மரணமடைந்தனர்.  300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல்கள்  தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இப்ராஹிம், காலத் பக்ரோய் என்ற சகோதரர்கள், மனித வெடிகுண்டு களாக இந்த தாக்குதலை நடத்தி இருப்பது  தெரியவந்தது. அதன்பின், நஜிம் லச்ரோய் என்ற பயங்கரவாதியையும், போலீசார் அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில், பெரிய பையை எடுத்துக் கொண்டு  வந்த மற்றொரு தீவரவாதியும் அடையாளம் காணப்பட்டுள்ளான். தாக்குதலில், இவன் பலியாகியிருக்கலாம் என, காவல் துறை சந்தேகிக்கிறது.
சென்னையைச் சேர்ந்த ராகவேந்திர கணேஷ் என்ற இளைஞர், பிரஸல்ஸ் நகரில் உள்ள, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், கனிணி பொறியாளராக பணியாற்றி வந்தார். பிரஸல்ஸில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின், அவர், மாயமானதாக தகவல் வெளியானது. அவரை  கண்டுபிடிப்பதற்கு, பெல்ஜியத்தில்  உள்ள  இந்திய தூதரகம் மூலம், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ராகவேந்திரன், குண்டு வெடிப்புக்கு முன், கடைசியாக, மெட்ரோ ரயிலில் இருந்து தொலைபேசியில் பேசியதாக தெரியவந்துள்ளது.
‘மாயமான இன்ஜினியரை கண்டுபிடிக்க பிரஸல்ஸில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்’ என,
வெளியுறவு மந்திரி  சுஷ்மா சுவராஜ், ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸ் விமான நிலைய தாக்குதலில் காயமடைந்த, ஜெட் ஏர்வேஸ் விமான குழுவைச் சேர்ந்த இந்தியர்கள், நிதி சபேகர், அமித் மோத்வானி ஆகியோர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாக,  அங்கிருக்கும்  இந்திய துாதர் மன்ஜீவ் புரி தெரிவித்ததாக, சுஷ்மா தெரிவித்துள்ளார்.