பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று அதன் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் சில.
* மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.
* தொழில்நுட்ப தொழில்கல்வி மற்றும் பயிற்சியை (Technical Vocational Education and Training – TVET) வழங்க உலகத்தரம் கொண்ட தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதில் படிப்பவர்களுக்கு வேலை உறுதி என்ற நிலை உருவாக்கப்படும்.
* தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது.
* கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, அவர்களின் தாய்க்கு தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
* வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் இதில் சேர்க்கப்படும்.
* தோட்டக்கலைத் துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றுக்கு தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களையும் சேர்த்து வேளாண் துறைக்கு மொத்தம் 3 அமைச்சர்கள் இருப்பார்கள்.
* நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்… தனி அமைச்சர்
* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும். பாமக ஆட்சி அமைந்தபின் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில் தான்.
* ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் (Lokayukta act) கொண்டுவரப்படும்.
* முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.
* தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையர்களாக நியமிக்கப்படுவர்.
* அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.
* மின்துறை சீர்திருத்தம் மூலம் 15% மின்கட்டணம் குறைக்கப்படும்.
* திருட்டு விசிடிக்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை.
* காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.