போபால்
பாஜகவின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம்மை சந்தித்ததாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 சட்டப்பேரவை தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மத்தியப் பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவர் பதவிக்கு வந்த 2 மணி நேரத்தில் முதல் பணியாக விவசாயக் கடனக்ளை தள்ளுபடி செய்தது அவருக்கு புகழை அளித்துள்ளது.
கமல்நாத் சமீபத்தில் இந்தியா டுடே ஊடகத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் கமல்நாத், “பாஜகவை சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னை சந்தித்தனர். அவர்கள் பாஜகவில் இனி எதிர்காலம் கிடையாது என்பதால் காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் விரைவில் காங்கிரசில் இணையக்கூடும்.
பாஜக நிலை இவ்வாறு இருக்க அந்தக் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சி சட்டப்பேர்வை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றனர். அவர்களிடம் பல ஆசைகளை காட்டி தங்கள் கட்சியில் சேர்க்க முயன்றுள்ளனர். இந்த விவரத்தை என்னிடம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.