கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் நிகழ்ந்த மாறுதல்கள் மற்றும் பாகிஸ்தானின் உள்நாட்டு ரத்த வரலாறு ஆகியவை குறித்து, சேகர் குப்தா எழுதிய நீண்ட கட்டுரையின் சுருக்கம்.
1969 – 2019 ஆகியவற்றுக்கு இடைபட்ட இந்த 50 ஆண்டு காலகட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் உறவிலும், இருநாட்டு உள்நாட்டு நிலைகளிலும் பல குறிப்பிடத்தக்க ஏற்ற – இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன.
1967ம் ஆண்டு நடைபெற்ற அரபு – இஸ்ரேலிய போரில், அரபு நாடுகளின் பெரும் தோல்விக்குப் பிறகு, இஸ்லாமிய நாடுகள் ஒன்றுசேர்ந்து, இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (Organization of Islamic Conference) என்ற ஒன்றை ஏற்படுத்தின. அப்போது, இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அந்த அமைப்பின் கூட்டத்திற்கு, அமைச்சர் ஃபக்ருதீன் அலி அகமதுவை பிரதிநிதியாக அனுப்பினார்.
ஆனால், அப்போது உலகின் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டிருந்த பிளவுபட்டிராத பாகிஸ்தானின் எதிர்ப்பால், அந்த அமைப்பு, இந்திய பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து இந்தியாவை அவமானப்படுத்திவிட்டது.
ஆனால், இப்போது 2019ம் ஆண்டு. 50 ஆண்டுகளுக்கு முன்னதாக, பாகிஸ்தானின் செல்வாக்கால் அவமானப்படுத்தப்பட்ட இந்தியா, இந்த ஆண்டு நடைபெறும் அந்த அமைப்பின் மாநாட்டில், முதல்முறையாக கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு ஒதுங்கத்தான் முடிந்தது. அதன் குரலை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
1979ம் ஆண்டு, ஆஃப்கனில், சோவியத் யூனியன் உள்நுழைந்தபோது, அமெரிக்காவின் தலைமையிலான நாடுகள், சோவியத்துடன் பனிப்போரை நடத்துவதற்கு, பாகிஸ்தானை முக்கிய களமாக பயன்படுத்திக்கொள்ள துவங்கின. தன் இடத்தை மகிழ்ச்சியாக அளித்த பாகிஸ்தான், தாராள நிதியுதவியையும் பெற்றுக்கொண்டது. இதன்விளைவாக, பாகிஸ்தானின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை, 1980ம் ஆண்டுகளில், அன்றைய இந்தியாவின் நிலையைவிட மேம்பட்டிருந்தது.
மேலும், ஆஃப்கன் போரினால் கிடைத்த நிதியை, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளில் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு, ரத்தக்களறியாக்க பயன்படுத்திக்கொண்டது பாகிஸ்தான்.
ஆனால், அதன்பிறகான காலகட்டங்களில், பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரிய சரிவை சந்திக்கத் தொடங்கியது. இதற்கிடையே, இந்தியாவின் மீது 1000 ஆண்டுகால போரை அறிவித்த ஜுல்ஃபிகர் அலி புட்டோவின் குரலும் நினைவுக்கு வருகிறது. முன்பு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த அரபு பிராந்தியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட முஸ்லீம் நாடுகள், இன்று இந்தியாவின் பக்கம் உள்ளன.
கார்கில் ஊடுருவல் மற்றும் அப்போரில் பாகிஸ்தானின் தோல்வி, அதற்கடுத்து ஏற்பட்ட ராணுவ ஆட்சி போன்றவற்றால், அந்த நாடு அடுத்தடுத்து பின்னுக்கு சென்றதுதான் மிச்சம். சர்வதேச புனிதப்போர் நோக்கத்திற்கு தன்னை தலைவனாக கருதிக்கொள்ளும் பாகிஸ்தான், இஸ்லாமிய உலகின் கோட்டையாக மார்தட்டிக்கொண்ட பாகிஸ்தான், இன்று மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களில், இந்தியாவைவிட பல மடங்கு பின்னோக்கி சென்று கொண்டுள்ளது பாகிஸ்தான்.
இன்று அந்நாட்டின் பிரதமராக இருக்கும் இம்ரான்கான், தன் நாட்டை புதிய பாதையில் செலுத்துவரா? அல்லது பழைய அழிவுப் பாதையிலேயே தொடரச் செய்வாரா? வரலாறு எப்படி எழுதப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– மதுரை மாயாண்டி