ஸ்வீடன்
இங்வார் காம்ப்ராட், உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர். உலகின் பிரபலமான இகியா நிறுவனத்தின் உரிமையாளர். இந்த உலக மகா பணக்காரர் தனக்குத் தேவையான ஆடைகளை எங்கு வாங்குவாராம் தெரியுமா? மறுவிற்பனை செய்யும் கடைகளில்தானாம் அதாவது ‘சகன்ட் சேல்ஸ்’ கடைகளில் ஆடைகளை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தி இருக்கிறார். இந்தத் தகவல் அவரைப் பற்றி ஸ்வீடனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆவணப்படத்தில் கூறியிருக்கிறார்.
இந்த மார்ச் 3 ஆம் தேதியுடன் 90 வயதை தொட்டிருக்கும் அவர், தன்ன்னுடைய நிறுவனத்தை உலகின் முன்னணியாக்குவதற்காக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடித்திருக்கிறார். அதுபற்றி ஆவணப்படத்தில் அவரே விவரித்திருக்கிறார்.
“ நான் வாங்கும் உடைகளை மறுவிற்பனை செய்யும் கடைகளிலிருந்து வாங்கியதாக ஒருபோதும் நினைத்ததில்லை. இதன்மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன்.. சிக்கனம் என்பது என்னுடன் இயற்கையாகவே பிறந்த ஒன்று. என் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் இயல்புக் குணம் அது .” என்கிறார் 65.5 பில்லியன் யுரோ மதிப்பிலான சொத்துக்களைக் கொண்ட காம்ப்ராட். அமெரிக்காவின் முன்னணி வர்த்தக இதழான ‘போர்ப்ஸ்’- காம்ராட்டை உலகின் 4 ஆவது பணக்காரர் என 2006 ஆம் ஆண்டு பட்டியலிட்டிருந்தது.
காம்ப்ராட் சற்று மிதமான செலவு செய்தால் கூட அது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது..அப்படித்தான் 2008 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ல சலூன் ஒன்றில் முடிவெட்டியிருக்கிறார். அதற்கு 22 யுரோவை கட்டணமாக வசூலித்திருக்கிறார்கள். நம் சிக்கன சிகாமணி அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். தன்னுடைய பட்ஜெட்டை மீறி இந்தச் செலவு நடந்து விட்ட்தே என அங்குள்ள பத்திரிகைகளிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். இதற்காக பெரும்பாலும் வளரும் நாடுகளில் அதாவது ஏழை நாடுகளுக்கு பயணம் செல்லும்போதுதான் அவர் முடி வெட்டிக் கொள்வாராம். கடந்தமுறை வியட்நாம் சென்றபோது குறைந்த கட்டணத்தில் முடிவெட்டியதையும் சொல்லி இருக்கிறார்.
1973இல் அவர் சுவீடன் நாட்டில் வசித்தபோது வரிவிதிப்பு கடுமையாக இருந்திருக்கிறது. இதற்காக வரிவிதிப்புக்கு பயந்து குறைந்த வரிவிதிப்பு நாடான ஸ்விட்சர்லாந்துக்கு போய்விட்டாராம்.
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான காம்ப்ராட், 2010 ஆம் ஆண்டு முதல் தனது பொறுப்புகளிலிருந்து படிப்படியாக ஒய்வுபெற்று தனது நிறுவனத்தை 3 மகன்களிடமும் ஒப்படைத்துவிட்டு 2014 முதல் மீண்டும் ஸ்வீடன் திரும்பி வசித்து வருகிறார்.