nad1
இந்தி திரையுலகின் பழம்பெரும் கதாநாயகனான திலிப் குமார்(93) மும்பையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ம் ஆண்டு பிறந்த திலிப் குமார், 1944-ம் ஆண்டு வெளியான ‘ஜுவார் பாட்டா’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
‘அந்தாஸ்’, ‘தேவதாஸ்’, ‘மொகலே ஆஸம்’, ‘ஆஸாத்’ உள்பட சுமார் 60 படங்களில் நாயகனாக நடித்த திலிப் குமார், தனது தனித்துவமான நடிப்புத்திறனால் ரசிகர், ரசிகைகளின் உள்ளங்களில் நீங்காதஇடம் பிடித்தார். 8 பிலிம்பேர் விருதுகளை ஒருசேர பெற்ற ஒரே நடிகர் என்ற சிறப்புக்குரிய இவர், பிலிம்பேர் அளித்த சிறந்த நடிகர் பட்டத்தை பெற்ற முதல்நபருமாவார்.
இதுதவிர, 1991-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மபூஷன் விருது, 1994-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது, 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது, 2015-ம் ஆண்டு பதம்விபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள திலிப் குமாரின் இயற்பெயர் முஹம்மது யூசுப் கான்.
பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்த இவர், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார். நேற்றிரவு திடீரென்று சளி, கபம் சார்ந்த காரணங்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திலிப் குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.