மும்பை:
தாவூத் இப்ராஹிம் வீட்டுத் திருமணத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொணஅடது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாதி தாவூத் இப்ராகில் நிழல் உலக தாதாவாக நீண்ட நாட்கள் மும்பை பகுதியில் கோலோச்சியவர். மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இவருக்கு தொடர்பு இருந்ததை அடுத்து இவர் தேடப்பட்டார்.
1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி, மும்பையில் 13 இடங்களில் தொடர்ச்சியாக நடந்த இந்த குண்டு வெடிப்புகளில் 257 பேர் பலியானார்கள். 700–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இவரை இந்திய பாதுகாப்பு படைகள் தேடத்துவங்கின. அப்போதுஇவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். தற்போது அங்கு தலைமறைவாக வசித்து வருகிறார்.
அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வற்புறுத்தியும், அவர் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அரசு சொல்லி வருகிறது.
தாவூத்தின் நெருங்கிய உறவினர்கள் பலர் மும்பை பகுதியில் வசித்துருகிறார்கள். இந்த நிலையில் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் நகரத்தில் கடந்த 19-ஆம் தேதி தாவூத் மனைவியின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், பா.ஜ.க-வின் முக்கிய தலைவருமான கிரிஷ் மஹாஜன் கலந்து கொண்டார். இவருடன் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காவல் ஆணையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தற்போது, இவர்கள் தாவூத் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பலருக்கும் சவால் விடுத்து தலைமறைவாக இருந்துவரும் பயங்கரவாதியின் குடும்ப விழாவுக்கு அரசின் முக்கிய பிரமுகர்கள் சென்றது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த விசாரணை நடத்த நாசிக் காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிகள் முதற்கொண்டு அமைச்சர் வரையிலான அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கிரிஷ் மஹாஜனோ, “அந்தத் திருமண விழாவில் பங்கேற்று திரும்பிய பிறகுதான் அது தாவூத் இல்லத் திருமணம் என்பதே தெரியும். மணமகளின் தாயும் தாவூத்தின் மனைவியும் சகோதரிகள் என்பது எனக்குத் தெரியாது. மணமகனின் தந்தை நகரின் முக்கிய பிரமுகர். அவரின் அழைப்பை ஏற்றுத்தான் அந்த விழாவில் பங்கேற்றேன்’ என்று கூறியுள்ளார்.