horror-love-story

ரெமு-சிமி காதலர்கள்அதிலும் தத்தம்து பேஸ்புக்-மொபைல் பாஸ்வேர்டுகளை ஒளிவுமறைவின்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு அவர்களின் காதல் வெளிப்படையானது.இதில் சிமி அரசியல் அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் முக்கிய புள்ளியின் ஒரே செல்ல மகள்.

ரெமு வின் பெற்றோர்–சிமியின் தந்தையளவிற்கு முக்கவில்லை எனினும்,தன் சொந்த உழைப்பில் முன்னேறி ஒரு பத்தாயிரம் கோடிக்கு ஒரே வாரிசாக தன் மகனை வைத்திருந்தனர்.

பள்ளிக் காலத்தில் விதையாக விழுந்த ரெமு-சிமி காதல் கல்லூரிக் காலம் வரையிலும் போன்சாய் ஆலமரமாகத்தான் இருந்தது.பள்ளி துவங்கி இன்றைய கல்லூரி வரையிலும் இருவருமே ஒரே பள்ளி-கல்லூரி தான்.சிமி வீட்டின் அரசியல் அதிகாரமே அவர்கள் காதலை இன்குபேஷன் பீரியட்டிலேயே இன்னமும் வைத்திருந்தது.காலம் அப்படியே இருக்கவில்லை.இன்டஸ்டிரியல் விசிட்டிற்காக-கல்லூரியிலிருந்து நியூசிலாந்திற்கு டூர் கிளம்பினார்கள்.

மாதத்திற்கு ஒருமுறை வழக்கமாக இடிந்து விழும் சென்னை விமான நிலைய மேல் கூறை கூட அன்று இடிந்து விழவில்லை.செக்யூரிட்டி செக்கிங்கில் மெட்டல் டிடக்டரை கொண்டு,அந்த காவலரை பரிசோதனை செய்தார்கள்.இமிகிரேசனில் எதற்காக சிமியின் பாஸ்போர்ட்டை ஒரு நிமிடத்திற்கு மேலாக உற்றுப் பார்த்தாய் என்று ஆபிசரை கேள்வி கேட்டார்கள்.அந்தளவிற்கு சென்னை பன்னாட்டு விமான நிலையம் பாதுகாப்பு ஏற்பாடுகளால் திமிலோகப்பட்டது.அதி முக்கிய அரசியல் பிரமுகரின் ஒரே மகள் சிமி வருகிறாள் என்றால் சும்மாவா?

ரெமுவும் தன் புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டில் வந்திறங்கினான்.இந்த இருவரோடு சேர்த்து மற்ற பயணிகளையும் சுமந்து கொண்டு விமானம் புறப்பட்டது.

வெலிங்டனில் அப்படியே கண்ணை மூடி பார்க்கில் அமர்ந்திருந்த ரெமு மனத்திரையில் மேற்கண்ட காட்சிகள் நானூத்தம்பதாவது தடவையாக ஓடியது.

“என்ன பிளான் வச்சுருக்க? நாம வந்து இன்னையோட பிப்டீன் டேய்ஸ் ஆச்சு…டூமாரோ மை எய்ட்டீன்த் பர்த்டே,அதோட நம்ம டூரும் முடியுது…ஞாபகமிருக்குல்ல?” சிமி ரெமுவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தாள்.

“ம்ம்…”

“என்னடா…ம்ம..ன்னு பைனரிஸ்ல பதில் சொல்ற!…மத்த நேரம்ல்லாம் மே மாச வெயில் மாதிரி போதும் போதும்ங்கற அளவுக்கு நடந்துக்குவ…கல்யாணம்ன்னா பைனரி மோடுக்கு போயிடுற?”

“ம்க்கும்…உங்கப்பாவை நெனைச்சாத்தான்…”

“ஸோ?”

“ஒண்ணு பண்ணலாமா…?”

“மறுபடியுமா?”கண்சிமிட்டியபடி செல்லமாக அவன் குமட்டில் தன் ஐ போனால் அடித்தாள்.

“ஆஹா…இல்ல இது வேற!” சிமியின் விரல் பிடித்துச் சொன்னான்…

“வேறயா?

“ஆனா அதுக்கு நீ ஒத்துக்கனும்?”

“அதான் எல்லாத்துக்கும் தான் ஒத்துகிட்டாச்சே…புதுசா என்ன அது…லெட் மீ ஹியர் யூவர் ஐடியா பர்ஸ்ட்..”என்றாள் கண்சிமிட்டியபடி.

“வர்ற ஏப்ரல் போர்ட்டீன்த்தோட உனக்கு எய்ட்டீன்த் பர்த்டே கம்ப்ளீட் ஆகுதுல்ல?”

“ஆம்மா…..”இழுத்தாள்…

“இங்க வச்சே கல்யாணம் பண்ணிக்குவோம்.பண்ணிட்டு,இனி சிமி மேஜர்..லீகலி எங்க கல்யாணம் செல்லும்ன்னு போய் நின்னுட்டா?”

“எங்கப்பா…அப்படியா ஸோ குட் ன்னு நம்மள கிரீட் பண்ணுவாறு…போடா டோமரு…@££@#^*…”

“என்னடி இது கெட்டவார்த்தைல்லாம்..”

“எல்லாம் உன்ட்ட கத்துகிட்டதுதான்டா எரும…”

“லெட் மீ கம்ப்ளீட்…நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ன்னு நாம இங்கிருந்து கெளம்புறதைக்கு முன்னால மீடியாக்கு போட்டோஸை இமெயில் பண்ணிரலாம்.பேஸ்புக் ஸ்டேடஸூம் அப்டேட் பண்ணிரலாம்.ஸேஃப்..அதோட…”

“என்ன அதோட….இன்னும் வச்சுருக்கியா?இன்டிரஸ்டிங்…”

“இந்த இடத்துல ஒரு சாங் வைக்குறோம்…

“சாங்கா?”

“பின்னே..என்னடி ஸ்டோரி நரேஷனா நடக்குது இங்க…உங்கப்பாவ நெனைச்சா….டார்க் நைட்ல வர்ற ஜோக்கர் மாதிரி பயமாருக்கு…ஆனாலும் அதுக்கும் எங்கிட்ட செம ப்ளான் ஒண்ணுருக்கு!!!”

“வாட்ஸ் தட் ப்ளான்?”

“அத இப்பவே சொல்லிட்டா த்ரில் இருக்காது…”

“ப்ளீஸ் சொல்லு…”

“அத நா உங்கிட்ட சொல்லனும்னா..ஒரு கன்டிசன்” என்று எதையோ சிமி காதில் கிசுகிசுத்தான்.அந்த கிசுகிசுப்பு,

“ச்சீய்ய்ய்” என்ற செல்ல சிணுங்கலை சிமி வாயில் இருந்து வரவைத்தது.அதன் பின் அங்கே பேச்சு சப்தம் கேட்கவில்லை.

அந்த ஏப்ரல் 14 வந்தது.

பல டெராபைட் வாழ்த்துக்களை மெசஞ்சர் கால்களும், மேசேஜ்களும்,பேஸ்புக் வாழ்த்துக்களும் சுமந்து வந்தன.சிமி ரெமுவை சுமந்து கொண்டிருந்தாள்.ஒரு வழியாக இன்டஸ்டீரியல் விசிட்டை முடித்துக் கொண்டு கல்லூரி குழு கிளம்பியது.ஆங்…சொல்ல மறந்துட்டோம்ல…ஒரு பதினைந்து நிமிடம் ரீ-வைன்ட் செய்வோம்.

கல்லூரி குழு தாய்நாடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தது.சிமியும்-ரெமுவும் பக்கத்திலிருந்த கோவிலில் ஆஜரானார்கள்.வெகு எளிமையாக ஒரு சில நண்பர்கள் புடைசூழ அவர்கள் திருமணம் நடந்தது.சிமியின் கழுத்தில் ரெமு கட்டிய தாலி மின்னியது.கல்யாணம் முடிந்தது.அதை அப்படியே பல புகைப்படங்கள் எடுத்தனர்.அது இந்தியாவின் சகல ஊடகங்களுக்கும் சென்றது.சர்வ ஜாக்கிரதையாக இவர்கள் திருமணத்திற்கு உதவிய நண்பர்கள் அவுட் ஆப் போகஸ் ஆனார்கள்.உடனடியாக சிமியின் பேஸ்புக் ஸ்டேடஸ் “மேரீட்” என்று மாறியது.அனைவரும் இந்தியா செல்லும் விமானத்தில் ஏறினார்கள்.விமானம் கிளம்பியது.

சிமியின் “காட் மேரீட்” பேஸ்புக் அப்டேட்-நோட்டிபிகேஷனாக அவள் தந்தைக்கு வந்தது.ஓரிரு நிமிடங்கள் அதைக் கூர்ந்து பார்த்தார்.அவரது கண்கள் சிவந்தது.யார்யாருக்கோ அலைபேசினார்.முடிவில்,

“அந்தப் பயல் ஏர்ப்போர்ட்டை தாண்டக் கூடாது” உத்திரவு பறந்தது.

சிங்கப்பூரில் இரண்டு மணிநேர ட்ரான்சிட்.அவ்வளவுதான்.அதைத் தவிர வேறெங்குமே நிற்காமல்,மொத்தம் பதினைந்து மணி நேர விமானப் பயணத்தை முடித்துக் கொண்டு-காதலர்களை சுமந்து வந்த விமானம் மீனம்பாக்கத்தில் ஜீரோ அடியைத் தொட்டது.

செய்திகளை விட சேனல்கள் அதிகமாகிவிட்ட இக்காலத்தில்,பரபரப்பிற்காக எதையும் செய்யத் துனிந்த ஊடகங்கள்-நாட்டின் முக்கிய அரசியல்வாதியின் மகள் விசயத்தை விடுமா? விமான நிலையத்தின் அரைவல்ஸ் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டன.செய்தி ஊடகங்களே களத்தில் இறங்கும் போது பேஸ்புக் போராளிகள் லேசில் விடுவார்களா?

இத்தனை எதிர்பார்பபுகளுக்கிடையில் காதல் பறவைகள் இம்மிகிரேசன் பிரிவிற்கு வந்தார்கள்.வழக்கமான விசாரிப்புகள் கூட அவர்களுக்கு நடக்கவில்லை.உடனடியாக “எம்பார்க்டு” சீல் அடிக்கப்பட்டு பாஸ்போர்ட் தரப்பட்டது.ஒருவித பரபரப்பும்-பதட்டமும் ஒட்டு மொத்த மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் தொற்றிக் கொண்டது.என்ன நடக்குமோ-ஏது நடக்குமோ என்ற உச்சகட்ட பரபரப்பு.

“இம்மிகிரேசன் முடிஞ்சது..அடுத்து இனி பேக்கேஜ் கலெக்சன் தான்.இப்பவாவது சொல்லு அது என்ன ப்ளான்?” சிமி அகல கண்களை விரித்தாள்.

“அட இருப்பா…டோன்ட் வொர்ரி” ரெமு படுகூலாக சொன்னான்.

விமான நிலையத்தின் எல்லா சடங்குகளையும் முடித்துக் கொண்டு காதல் ஜோடி வெளியே வந்தனர்.அடுத்த நொடி அவர்களை சிமியின் தந்தையின் ஆட்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர்.அவர்கள் அனைவரின் கையிலும் ஆர்சனிக் தடவப்பட்ட Stiletto க்கள்.மீடியா ஆட்களைக் கிட்டவே நெருங்க விடவில்லை.எவரிடம் ரெமு சிக்கினாலும் ஸ்டில்லெட்டோவை அவன் இடுப்பில் சொருக திட்டம் போடப்பட்டிருந்தது.கொப்பளிக்கும் கோபத்தோடு சிமியின் தந்தை அவர்களை நெருங்கினார்.அவர் கையில் துப்பாக்கி.

சிமி-ரெமுவின் கரங்களை இறுக்கப் பற்றினாள்.

“லேய்ய்ய்ய்” என்ற சத்தத்தோடு ஒருவன் நெருங்க…

“டேய்…என்னடா சும்மாருக்குற…எங்கப்பா ஆளுங்க நம்மள சரவுண்ட் பண்ணிட்டாங்க…எதாவது பண்ணு”பதறினாள்.

“கூல் பேபி..” தன் ரே-பன் வழியாக சிமியைப் பார்த்து புன்னகைத்தான்.பின் தன் மொபலை எடுத்தான்.ஏதோ செய்தான்.

அடுத்த நொடி,

சிமியின் தந்தை-அவரது அடியாட்கள்-மீடியா-அப்படியே முற்றிலும் காணாமல் போனார்கள்.ஒருவரைக் கூட காணவில்லை.சிமி மயங்கிச் சரிந்தாள்.

எதிரே ரெமுவின் பெற்றோர் மட்டும் புன்னகையோடு நின்றிருந்தனர்.

“மம்மி-சிமி க்கு ஜெட்-லாக் அதான் மயங்கிட்டா” என்றவாரே பிஎம்டபிள்யூ வில் ஏறிக்கொண்டான்.கார் பறந்தது.காரின் ஏசிக் குளுமை சிமியை எழுப்பி விட்டது.சுற்றும் முற்றும் பார்த்தாள்.வியப்படைந்தாள்.ரெமுவைப் பார்த்தாள்.

“என்னடா பண்ணுன? எங்காப்பா,அவர் ஆளுங்க யாரையுமே காணோம்?”

“அதுவா….நம்ம லைஃப் ஸ்டோரியான இது எங்க நடக்குது?பேஸ்புக்ல.நாமெல்லாம் யாரு? பேஸ்புக் ஐடி க்கள்.அதான் உங்கப்பா ஐடியை யையும் அவரோட மியூச்சுவல் ப்ரண்டஸ் ஐடியையும் நம்ம கதையை எழுதுறானே-இவன்ட்ட சொல்லி ப்ளாக் பண்ண சொல்லிட்டேன்.இனிமே அவங்களால நம்மள பாக்கவே முடியாது.தட்ஸால்.”

-ஜி.துரை மோகனராசு