டெல்லி: பி.எப்., கணக்கில் இருந்து 40 சதவீதத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதியகத்தால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புதிய பென்சன் திட்டத்தின் கீழ் வருங்கால சேம நல நிதி மற்றும் முதுமை ஓய்வூதிய நியக டெபாசிட்டில் இருந்து 40 சதவீதத்துக்கு மேல் பணத்தை எடுப்பவர்களுக்கு வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி பிறகு இவற்றில் முதலீடு செய்யும் தொழிலாளி, தனது பங்களிப்பில் இருந்து 40 சதவீதம் வரை பணத்தை எடுத்தால் வரி விதிப்பில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த அளவுகோளை தாண்டினால் வரிவிதிக்கப்படும். மீதமுள்ள 60 சதவீதத்துக்கும் வரி விதிக்கப்படும்.
ஏற்கனவே உள்ள 80சிசிடி பிரிவின் கீழ் தேசிய பென்சன் திட்டத்தில் ஒரு தொழிலாளி கணக்கை முடித்து பணம் பெற்றாலோ, அல்லது பென்சன் வேண்டாம் என்று வெளியேறும் போது பெறப்படும் தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
பென்சன் பெறுவோரது இறப்புக்கு பிறகு வாரிசுக்கு வழங்கப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படமாட்டாது. வருங்கால வைப்பு நிதி மற்றும் முதுமை ஓய்வூதிய நிதியக முதலீடுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேசிய பென்சன் திட்டம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சேவைகளுக்கு, சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதிக்காக டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.