இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குரிமையைக் கட்டாயமாக்குவது முதன்முதலாகக் கர்நாடகாவில்பஞ்சாயத்து தேர்தலில் சட்டமாக்கப்பட்டும், ஆனால் அதை நிறைவேற்ற வேண்டிய செயல்பாடுகள் சரிவரநடைபெறாமல் அந்த நோக்கம் முடங்கிப் போனது.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை கட்டாயமாக்கப்பட்டு, அவ்வாறு வாக்களிக்கும் கடமையைச்செய்யவில்லை என்றால் ரூபாய் 100/- அபதாரம் என்ற சட்டத்துக்கு குஜராத் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததினால் இச்சட்டம் இப்போது நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.

2014ல் கட்டாய வாக்களிப்பு என்ற தனிநபர் மசோதாவை பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தன சிங்,சிக்ரிவால், வருண் காந்தி மக்களவையில் கொண்டுவந்தனர். 2004லும் 2009லும் இதேமாதிரியான மசோதாநாடாளுமன்றம் வந்து நிறைவேறவில்லை.

அமெரிக்காவிலும் இதைக்குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு, அதிபர் ஒபாமா கடந்த மார்ச்சில் வாக்குரிமைகட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் இருந்தநாடுகளான ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்த்திரியா, வெனிசுலா, சிலி, பிஜி தீவுகள் போன்ற நாடுகள் கட்டாயவாக்களிக்கும் நடைமுறையினை திரும்பப் பெற்றுவிட்டன.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வாக்குரிமையைக் கட்டாயப்படுத்துவது எளிதான செயல் அல்ல என்று
“லா கமிஷன்” தன் கருத்தை வெளியிட்டது. 1990ல் தினே்ஷ் கோஸ்வாமி தேர்தல் சீர்திருத்தக் குழுவும், “வாக்குரிமைகட்டாயமாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், செயல் திறனும் இந்தியாவில் முடியாது” என்று தன்னுடையபரிந்துரையில் கூறியிருந்தது.

உலகில் 20க்கும் மேலான நாடுகளில், குறிப்பாக அர்ஜெண்டைனா, ஆஸ்த்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கிரீஸ்போன்ற நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு, சட்டங்களும் நடைமுறையில் உள்ளன .

ஆஸ்திரியாவிலும், பெல்ஜியத்திலும் வாக்களிக்காதவர்களுக்கு அபதாரமும், சிங்கப்பூரில் வாக்காளர் பட்டியலில்இருந்து பெயர் நீக்கமும், பெரு நாட்டில் பொது அங்காடியில் இருந்து வழங்கும் அத்யாவசியப் பொருட்களைநிறுத்துவதும், பொலிவியா நாட்டில் மூன்றுமாத ஊதிய ரத்தும், பெல்ஜியத்தில் மேலும் அரசு ஊழியர் என்றால் பதவிஉயர்வை நிறுத்துவது என கடுமையான விதிமுறைகள் உலகளவில் நடைமுறையில் உள்ளன.

நெதர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் இணையதளம், செல்பேசி, பதிலி (Proxy) போன்றவைமூலம் வாக்களிக்கும் வசதிகளும் உள்ளன. சில இடங்களில் ஏ.டி.எம் மையத்திலே வாக்களிக்க முடியுமா என்றுபரிச்சயார்த்த சோதனைகளும் நடந்து வருகின்றன.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப் படவேண்டுமென்றால் தேர்தல் களத்தில் அதற்கானகட்டமைப்பும், தயார்படுத்தல்களும் இருந்தால் தான் செயல்படுத்தமுடியும்.

“ஓட்டுக்குப் பணம்” என்ற நிலைக்கு இந்திய வாக்காளர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். இதைப் போக்கக்கூடிய வகையில்உலகநாடுகளில் அமலில் இருக்கும், “அரசே வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஏற்கின்ற முறை” வேண்டுமென்றுஇந்திரஜித் குப்தா அறிக்கை 1999ல் பரிந்துரை செய்துள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்தெல்லாம் என்னுடைய பொதுநலவழக்கு உச்சநீதிமன்றத்தில், தேர்தல் சீர்திருத்தங்கள் எவையெல்லாம்பரிந்துரைகளாக உள்ளன. அவையெல்லாம் வரிசைப்படுத்தி, வாய்ப்புள்ளவைகளை உடனே நடைமுறைக்குக்கொண்டுவரவேண்டும் என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர இருக்கின்றது.