பாட்னா:
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்திய போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசு பணிந்து விட்டதாக, பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்தார்.
பீகார் மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் பாட்னாவில் உள்ள காந்தி மை£னத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி மாநில தலைவர் ஷிவ்பால் சிங் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
“பீகாரின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கிறது. லாலு பிரசாத் கூட மாநில வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு வழங்கி இருக்கிறார்.
மோடி அரசு தனது பதவிக்காலத்தின் கால் பகுதியை முடித்து விட்டது. ஆனால் அவரிடம் வெறும் பேச்சு மட்டுமின்றி செயல் எதுவும் இல்லை. நாட்டு மக்களுக்கு மோடி அரசு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. இது என்னைவிட நாட்டுமக்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார் மோடி. ஆனால் அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், ஏராளமான இளைஞர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேலைவாய்ப்பை உருவாக்கிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைத்திருக்கிறது.
தேசத்தில் விலைவாசி அதிகரித்துக்கொண்டே போகிறது. ரூபாயின் மதிப்பு சரிவடைந்துகொண்டே வருகிறது. நாட்டில் ஊழலை ஒழிப்பது தொடர்பாக பிரதமர் மோடியிடம் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே உள்ளன. பாராளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையும் அவர், நிறைவேற்றவில்லை.
பாகிஸ்தானுடனான பிரச்சினை குறித்து சவால் விட்டிருந்த அவர், தற்போது இந்திய வீரர்கள் மற்றும் மக்கள் தாக்கப்படும் போது மவுனம் காக்கிறார்.
பாகிஸ்தான் விவகாரத்தில் அவரது கொள்கை என்ன என்பதை இந்த நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி தனது பணக்கார நண்பர்களுக்கு கொடுக்க அவர்கள் விரும்பினர் மோடி. இதற்காக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மூன்று முறை அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகளின் உரிமைக்காக நாங்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உறுதியான போராட்டங்களை நடத்தினோம். அதன் பயனாக தற்போது மத்திய அரசு இறங்கி வந்துள்ளது. நிலம் எடுக்கும் மசோதாவை கைவிடவும் முடிவு செய்திருக்கிறது.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.