டில்லி
நிரவ் மோடி வெளிநாடு செல்வதற்கு அரசுத் துறையான வருமான சோதனை இயக்குனரகம் சிபிஐ வழக்கு தொடுக்கும் முன்பே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12000 கோடி அளவில் முறைகேடுகள் செய்து விட்டு தற்போது குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். அவர் நாட்டை விட்டு செல்லும் முன்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு செல்ல அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார். அந்தப் பிரிவு உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கீழ் வருகிறது.
நிரவ் மோடியின் விண்ணப்பம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டது. அந்த விண்ணப்பம் நிதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக வருமான சோதனை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி மீது ஏற்கனவே பொருளாதாரக் குற்றச்சாட்டு 2014 ஆம் வருடம் எழுப்பப் பட்டிருந்ததாலும் அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாலும் அவரது விண்ணப்பத்தை இந்த இயக்குனரகம் அங்கீகரிக்கவில்லை. நிரவ் மோடி மீது ரூ.890 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் முத்துக்கள் உள்ளிட்ட கற்கள் மோசடி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. வருமான வரித்துறை இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்ததாகவும் ஆனால் அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரி ஒருவர், “சிபி வழக்கு தொடுக்கும் முன்பே வருமான சோதனை இயக்குனரகத்தின் எதிர்ப்பு நிதி அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டு விட்டது. நிரவ் மோடி நாட்டை விட்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வெளியேறி உள்ளார். அவர் மனைவி ஜனவரி ஆறாம் தேதி வெளியேறி உள்ளார். அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டிஸ் ஜனவரி 31 ஆம் தேதி பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஜனவரி 23 ஆம் தேதி டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மையக் கருத்தரங்கில் நிரவ் மோடி பிரதமர் மோடியுடன் காணப்படுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “நாட்டை விட்டு ஓடிய தொழிலதிபர் பிரதருடன் காணப்படுகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.