“ நாயைவிட மோசமாய் என் கணவரின் உடல்…. ” மரணமடைந்த சி.ஆர்.பி.எப். வீரரின் மனைவி கண்ணீர் புகார்
என் கணவரின் உடலை நாயைவிட மோசமாய் நடத்தியிருப்பதாக சண்டிகாரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்து இறந்தபோனவரின் மனைவி அத்துறையின் அதிகாரிகள் மீதும் உள்துறை அமைச்சக்த்தின் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
கேரளாவின் சிங்கோலி மாவட்டத்தில் பிறந்தவர் அச்சென் குஞ்சு. 33 வயதான இவர் சண்டிகாரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்து வந்தார். இவர் அங்குள்ள தண்ணீர்த் தொட்டி ஒன்றில் மார்ச் 24 ஆம் தேதியன்று சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய உடல் சிதைந்தபோன நிலையில் இன்று ( ஏப்ரல் -2) அவருடைய சொந்த ஊரான கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட்து. அப்போது அவருடைய உடலை ஒரு பிளாஸ்டிக் காகித்தில் ஒரு மூட்டையைப்போல் கட்டி வைத்திருந்தனர். அவரது உடலைப் பார்த்து அவருடைய மனைவியும் உறவினர்களும் கதறி அழுதனர். அப்போது தன் கணவரின் உடல் கொண்டுவரப்பட்ட முறை குறித்து அவருடைய மனைவி லினி மிகவும் கண்ணீருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய கணவர் ஒரு நாயைப்போல நடத்தப்பட்டுள்ளார். இறந்துபோன அவருடைய உடலை ஒரு துணியால்கூட சுற்றி அனுப்பி வைக்கவில்லை. என்னுடைய கணவர் சாதாரண ஜவான். அதனால்தான் இப்படி நடத்தியிருக்கிறார்கள். அதேவேளை அவர் ஒரு அதிகாரியாக இருந்திருந்தால் இப்படி நடத்தியிருப்பார்களா? இதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகளும் , உள்துறை அமைச்சகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ இறந்துபோனவர் என்னுடைய சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். மாநில அரசு தப்பில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வோம். இறந்துபோனவரை மட்டும் நம்பியே அவருடைய குடும்பம் வாழ்ந்திருக்கிறது. மாநில அரசு முடிந்த உதவிகளைச் செய்யும் என்றார் அவர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது என்றும் இதுதொடர்பாக முறையான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.