டில்லி:
நீரவ் மோடிக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரியான நீரவ் மோடி, மோசடியான முறையில் ரூ.11,400 கோடி கடன் பெற்று ஏமாற்றினார்.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்தின் புதிய அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து பங்கு சந்தைக்கு அறிக்கை அனுப்பினர். இதையடுத்து நீரவ் மோடியின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நீரவ் தலைமறைவாகிவிட்டார். தற்போது சென்னையில் அவருடன் தொடர்புடைய பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். மேலும், நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றது.
இதில் எவ்வளவு தங்கம், வைரம் கைப்பற்றப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும் ரூ. 25 கோடி வைரம், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5,674 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.