டெல்லி: ‘‘தனது புத்தகத்தில் எழுதியிருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தவறாக குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்’’ என ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர் சர்மிளா போஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஜேஎன்யு வளாகத்தில் மாணவர்கள் எழுப்பிய தேசத்துக்கு எதிரான கோஷங்கள் குறித்து பேசுகையில், 1971ம் ஆண்டின் பங்களாதேஷ் போர் நினைவுகள் குறித்த எனது புத்தகமான டெட் ரெக்கோனிங்கை குறிப்பிட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி நாடாளுமன்றத்தில் பேசினார்.
பேச்சு உரிமை தொடர்பாக இதை மேற்கோள்காட்டி அவர் பேசியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், அவர் எனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை தவறாக சுட்டிக் காட்டியுள்ளார்.
பங்களாதேஷ் விடுதலைக்காக போர் நடந்தது என்பது போலிவாதம் என்று எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் இந்தியா குறித்து நான் குறிப்பிடவில்லை. கிழக்கு பாகிஸ்தானில் என்ன விதிமீறல் நடந்தது உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புலனாய்வு ஆராய்ச்சிகளின் தொகுப்பாகும்.
‘பாகிஸ்தான் ராணுவம் பங்களாதேஷூக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் இந்திராகாந்தி தான் உதவி செய்ய முன் வந்தார்’ என்று எழுதியுள்ளேன். பாகிஸ்தான் நடத்திய அட்டுழியங்களை இதில் குறிப்பிட்டுள்ளேன். பெங்காலி தேசியவாதம் என்ற பெயரில் பெங்காலி அல்லாதவர்கள் மீது நடந்த தாக்குதல்களே இதில் இடம்பெற்றுள்ளன.
அமைச்சருக்கு உள்ள பணிச் சுமை காரணமாக எனது புத்தகத்தை முழுமையாக படிக்க நேரம் இருந்திருக்காது. அதனால் தொடர்பு இல்லாத விஷயங்களுக்கு எனது புத்தகத்தை தொடர்பு படுத்தியு பேசியுள்ளார். எனது சகோதரரான எம்பி முதல் நாள் பேசியதற்கு பதிலடி கொடுக்க, எனது புத்தகத்தை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்.
ராகுல்காந்திக்கும், சோனியாகாந்திக்கும் இந்த புத்தகத்தை வழங்க வேண்டும் என்று அமைச்சர் பேசியுள்ளார். இது ஒரு நல்ல ஆலோசனை. எனினும் தேசியவாதத்துக்கு பின்னால் உள்ள இருட்டு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் பல புத்தகங்கள் உள்ளன.
அதேபோல் தேசியவாதம் என்ற பெயரில் மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது நடந்துள்ள இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும். கேள்வி கேட்பது, அதிகார வர்க்கத்தை எதிர்ப்பது போன்றவை ஜனநாயகத்தின் ஒரு அங்கம். சேதியவாதம் என்ற பெயரில் மதம், அரசியல் போன்றவை இந்தியாவின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் புண்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.