நரேந்திரமோடியின் நீதிபதி தேர்வு சட்டம் செல்லாது: தீர்ப்பை கொண்டாடுவோம்!
நரேந்திரமோடி பதவி ஏற்றவுடன் வெற்றித் திமிரில் பல முக்கிய ஜனநாயக நிறுவனங்களை எந்தப் பொது விவாதத்திற்கும் வாய்ப்பளிக்காமல் இழுத்து மூடினார். திட்ட ஆணையம் (planning commission) அரசுத் தலையீடுகள் இல்லாமல் நீதிபதிகளைச் சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கும் கலேஜியம் முறை ஆகியன இவற்றில் அடக்கம். கலேஜியம் முறைக்குப் பதிலாக நீதிபதிகள் தேர்வில் அரசுத் தலையீட்டைச் சாத்தியமாக்கும் வகையில் மோடி அரசு உருவாக்கிய நீதிபதிகள் தேர்வு ஆணையச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாது என நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் ஒரு நீதிபதி தவிர மற்ற நால்வரும் ஒத்த கருத்துடன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் சிவில் சமூகம் முழுமையாக வளர்ந்துள்ளது எனச் சொல்ல இயலாது. இன்னும் கூட மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் நிறுவனமாக நீதிமன்றமே உள்ளது. இந்நிலையில் அரசுத் தலையீடு இ்ல்லாமல் நீதிவழங்கு அமைப்பு இருத்தல் அவசியம் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே இனி தொடர்ந்து நீதிபதிகளைத் தேர்வு செய்ய முன்னர் இருந்த கலேஜியம் முறையே தொடரும்.
கலேஜியம் முறையில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. அந்தக் குறைபாடுகளை நீக்குவதற்குப் பல ஆலோசனைகளை இது தொடர்பான அக்கறையுள்ள அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முற்றிலும் நீதிபதிகள் மட்டுமே அல்லாமல் சட்டப் பல்களைக் கழகத் துணை வேந்தர்கள் முதலானோரும் உள்ளடக்கப்பட்டதாகத் தேர்வு ஆணையத்தை அகற்சிக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் உள்ளன. எப்படியான போதிலும் நீதிபதிகள் தேர்வை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பதை ஏற்க இயலாது.
அந்த வகையில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத் தக்க ஒன்று.
Marx Anthonisamy https://www.facebook.com/marx.anthonisamy?fref=photo