கரூர்:
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுமீது சரியான நடவடிக்கை எடுக்காத கரூர் எஸ்பி மீது திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியிருந்தன.
அதைத்தொடர்ந்து,. கரூர் எஸ்பி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், புதிய எஸ்.பி விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலர் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அன்று நிறைவு பெற்றது. ஆனால், 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெற உள்ளது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணி, திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோர், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கரூர் எஸ்பி எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் வழிகாட்டு நடைமுறை இன்னும் தொடரும் நிலையில், கரூர் எஸ்.பி. ராஜசேகரன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் கணினி மயமாக்கல் பிரிவு எஸ்.பி. விக்ரமன் கரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.