பாட்னா: பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் ‘லாலு வாழ்க’ என்று முழக்கமிட்டதால் முதலமைச்சர் நிதிஷ்குமார் பொறுமை இழந்து கோபப்பட்டு உள்ளார்.
பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சி தலைவர்களும் இறங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, பார்சா சட்டசபை தொகுதியில் உள்ள டெர்னியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவில் இருந்த பலர் லாலு ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் அமைதியை இழந்த நிதிஷ் கூட்டத்தினரை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கடிந்து கொண்டார்.
இப்படி கத்த வேண்டாம், உங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என்றும் கூறினார். தமது பேச்சுக்கு இடையூறு விளைவிப்பதற்காக முழக்கங்களை எழுப்பியவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதா என்று நிதிஷ் கூட்டத்தினரிடம் கேட்டார். அப்போது அங்கு குழுமி இருந்த அவரது ஆதரவாளர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.