என். சொக்கன்
தலைவர் பொறுப்பிலிருந்து ஒருவர் விலகியதும், அவரை ‘முன்னாள் தலைவர்’ என்கிறார்கள். இதேபோல் முன்னாள் முதல்வர், முன்னாள் பிரதமர், முன்னாள் அதிபர், முன்னாள் ஆளுநர் என்று பல இடங்களில் பயன்படுத்தலாம்.
இதற்கு மாறாக, இன்றைக்கு ஒரு பதவியில் உள்ளவரை, ‘இன்னாள் தலைவர்’ எனலாம். இன்னாள் முதல்வர், இன்னாள் அதிபர் என்று பயன்படுத்தலாம்.
ஆனால், இதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடாது, முன்னாள், இன்னாள் என்று வித்தியாசப்படுத்துவதற்குதான் இது. மற்றபடி ‘அதிபர்’ என்றாலே ‘இன்னாள் அதிபர்’ என்றுதான் பொருள்.
உதாரணமாக, ‘முன்னாள் அதிபரும் இன்னாள் அதிபரும் சந்தித்தார்கள்’ என்று எழுதலாம். ஆனால், ‘இன்னாள் அதிபர் விழாவுக்குத் தலைமை தாங்கினார்’ என்று எழுதவேண்டியதில்லை. ‘அதிபர் தலைமை தாங்கினார்’ என்று எழுதினால் போதும்.
சில நாள்களுக்குமுன்னால், நண்பர் கார்த்திகேயன் எனக்கு ஓர் அழைப்பிதழை அனுப்பி, ‘இதில் மேனாள் மத்திய அமைச்சர் என்று அச்சிட்டிருக்கிறார்களே. ‘முன்னாள்’க்குப் பதில் இப்படித் தவறாக அச்சிட்டுவிட்டார்களா?’ என்று கேட்டிருந்தார்.
ஆரம்பத்தில் நானும் அப்படிதான் எண்ணியிருந்தேன். அதன்பிறகு, ‘மேனாள்’ என்பதும் ‘முன்னாள்’ என்பதும் ஒரே பொருள்தான் என்று தெரிந்துகொண்டேன்.
மேனாள்=மேல்+நாள், அதாவது earlier days. இதற்குமுன் நடந்த விஷயத்தைச் சொல்லும்போது, மேனாள் நிகழ்ச்சி என்று சொல்லலாம். முன்னாளுக்கு இணையான சொல்தான் இது.
உதாரணமாக, நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வார் வெண்பா.
பார்த்த கடுவன் சுனைநீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்த்து, கார்த்த
களங்கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு
திருவேங்கடமலையில் ஓர் ஆண் குரங்கு இருந்தது, அது அங்கிருந்த சுனையில் தண்ணீர் குடிக்க எட்டிப் பார்த்தது. அங்கே அதன் பிம்பம் தெரிந்தது. அதைப் பார்த்து, அங்கே இன்னோர் ஆண் குரங்கு இருப்பதாக நினைத்துவிட்டது அந்தக் குரங்கு.
ஆகவே, ‘வம்பு எதற்கு?’ என்று வேறோர் இடத்துக்குச் சென்றது. அங்கே மேகம் போல் கருத்த களாப்பழத்தைக் கை நீட்டி எடுத்து உண்டது.
அந்தத் திருவேங்கடமலை யாருடையது தெரியுமா? மேனாளில் (அதாவது, முன்னாளில்) கன்றை வீசி எறிந்து விளாங்கனியை விழவைத்த கண்ணன்/ திருமாலின் மலை.
(தொடரும்)