கட்டுரையாளர்: என. சொக்கன்
கோசலநாட்டை வர்ணிக்கும் கம்பன் பாடல்களில் ஒரு வரி:
‘மயில்ஊர்
கந்தனை அனையவர் கலைதெரிகழகம்’
அதாவது, கோசலநாட்டிலிருந்த இளைஞர்கள் மயிலிலே ஊர்ந்துவருகிற முருகனைப்போல் அழகாக இருந்தார்கள், அவர்கள் ஒன்றுகூடிக் கலைகளைக் கற்றுக்கொள்கிற கழகம் ஒன்று அங்கே இருந்தது.
கம்பர் சொல்கிற ‘கலைதெரிகழகம்’ என்னவென்று தெரிகிறதா? ‘பல்கலைக்கழகம்’தான்.
‘கழகம்’ என்றால் என்ன பொருள்?
கூடும் இடம் என்று இதற்குச் சுருக்கமாகப் பொருள்சொல்கிறார் தேவநேயப்பாவாணர். இதை இன்னும் தெளிவாகப் புரியவைப்பதற்காக, மேலும் சில சொற்களை வைத்து மிக அழகாக விளக்குகிறார்.
முதலில், குழு, சிலர் சேர்ந்த கூட்டம்.
அடுத்து, குழூஉ, இது குழுவைவிடப் பெரிய கூட்டம்.
மூன்றாவதாக, குழாம், நண்பர்குழாம், பெண்கள்குழாம் என்று பழைய கதைகளில் வாசித்திருக்கலாம். இது குழூஉ என்பதைவிடப் பெரிய கூட்டம்.
நான்காவதாக, குழுமம், இதனை இப்போது Group Of Companies என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். இது குழாமைவிடப் பெரியது.
இந்தக் குழுமத்துக்கு இணையான கூட்டம் அல்லது கூடும் இடம்தான் கழகம். ஆரம்பத்தில் எல்லாருடைய கூட்டத்தையும் குறித்துக்கொண்டிருந்தது, பின்னர் கற்றவர்கள் கூடும் நிலையான சபையைக் குறிக்கத்தொடங்கியது. இப்போது, அதே பொருளில் கட்சிகளின் பெயரிலும் இடம்பெற்றுள்ளது.
அப்படியானால், ‘நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்’ என்று கண்ணதாசன் எழுதினாரே!
பல கலைகளைக் கற்றவர்களின் சங்கமம்தான் நல்ல குடும்பம், சரிதானே!
(தொடரும்)