தேர்தல் தமிழ்!:  என். சொக்கன் எழுதும்
தேர்தல் தமிழ்!:  என். சொக்கன் எழுதும் புதுமையான தொடர்!
தினசரி உங்கள் patrikai.com  இதழில்…
நான், சொக்கன் பேசுகிறேன்..
தமிழில் இல்லாத சொற்களே இல்லை, அதேசமயம், பிறமொழிகளை அரவணைத்துக்கொள்வதிலும் தமிழர்கள் குறைவைத்ததில்லை.
ஒருகட்டத்தில், அந்த நல்ல பழக்கமே நமக்கு எதிரியாகிவிட்டது, முதலில் வடமொழிச் சொற்களும், இப்போது ஆங்கிலச் சொற்களும் தமிழில் சகட்டுமேனிக்குக் கலந்துவிட்டன. அவற்றைப் பிரிப்பதே பெருஞ்சிரமம், நீக்குவது இன்னும் சிரமம்.
இதோ, சென்ற பத்தியில்கூட, ‘சிரமம்’ என்ற சொல் வடமொழிதான், அதை மாற்றிக் ‘கஷ்டம்’ என்று எழுதினால் அதுவும் வடமொழி, இதற்குத் தமிழ்ச்சொல் என்ன என்று தேடும் பொறுமை இல்லாதவர்கள் வடமொழிச்சொற்களையே பயன்படுத்திவிடுகிறார்கள்!
ஒருவிதத்தில், தமிழ் எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கிறது என்று பெருமைப்படலாம், இன்னொருவிதத்தில், இன்றைக்குத் தமிழில் பிறமொழிக்கலப்பு இல்லாத துறைகளே இல்லையே என்று வருத்தப்படலாம்.
இந்த வருத்தத்துக்கு ஒரே ஓர் ஆச்சர்யமான விதிவிலக்கு, அரசியல், தேர்தல் தொடர்பான பெரும்பாலான சொற்கள் தூய தமிழில் உள்ளன. தேர்தல் தொடங்கிப் பதவியேற்புவரை, கூட்டணி தொடங்கித் தொகுதி உடன்பாடுவரை, தேர்தல் அறிக்கை தொடங்கி நன்றியறிவிப்புக்கூட்டம்வரை, அமைச்சரவை தொடங்கி அவைத்தலைவர்வரை, முதல்வர் தொடங்கி ஆளுநர்வரை, ஆட்சித்தலைவர் தொடங்கி தொண்டர்வரை… எல்லாம் அருமையான தமிழ்ச்சொற்கள், இங்குள்ள கட்சிகளின் பெயர்கள்கூட நற்றமிழிலேயே உள்ளன, அபூர்வமாக எங்கேயாவது ஒன்றிரண்டு பிறமொழிச் சொற்களைக் காணலாம், அவ்வளவுதான்.
இதற்குக் காரணம், தமிழகத்தில் அரசியல்வாதிகள் பலர் தமிழார்வலர்களாகவும் இருந்ததுதானா? தெரியவில்லை! காரணத்தை யோசிக்காமல் மகிழ்ந்துகொள்ளவேண்டியதுதான்.
இந்தப் பரபரப்பான தேர்தல் சூழலில், இதுதொடர்பான சில அழகழகான சொற்களைப்பற்றி நாளுக்கொன்றாகப் பார்ப்போம், ஆனால், அரசியல் கண்ணோட்டமின்றி, மொழிக்கண்ணாடியைமட்டும் மாட்டிக்கொண்டு!
நாளை முதல் தினசரி சந்திப்போம்.
நன்றி.
– என்றும் அன்புடன்,
என். சொக்கன் …