டெல்லி: தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் மத்தியில் ரூ.60 ஆயிரம் கோடி புழங்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியதை, தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி தலைவர், ரகுராம் ராஜன் சமீபத்தில், தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் மக்கள் கைகளில் வழக்கத்துக்கு மாறாக பணம் புழங்குவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி இன்று கூறுகையில், “ரிசர்வ் வங்கி தலைவர் கூறியுள்ள கருத்து முக்கியமானது. அதை கவனத்தில் எடுப்போம். ரிசர்வ் வங்கியுடன், தேர்தல் ஆணையம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியதற்கான காரணங்கள், பண புழக்கத்தின் மூல ஆதாரம் பற்றிய தகவல்களை சேகரிப்போம். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் தாக்கல் செய்த சொத்துக்களுக்கள், வருவாய்க்கு தக்கபடி வருமான வரி செலுத்தியுள்ளார்களா என்பதை சோதித்து அறிய வருமான வரித்துறையை கேட்டுக்கொண்டுள்ளோம். இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அந்த வேட்பாளர்கள் மீது வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்தார்.