தேர்தலால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் தாராளம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒப்புதல்
5 மாநில சட்டப்பேரவை தேர்தலால் பொதுமக்களிடம் எப்போதும் இல்லாத அளவுக்கு பணப்புழக்கம் தாராளமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள அசாமிலும், மேற்கு வங்காளத்திலும் முதல் கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
கடந்த தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தருவதாக புகார் எழுந்தது. இப்போதும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் காலத்தில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக தேர்தல் கமிஷன் பறக்கும் படைகளை அமைத்து, உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்கிற பணத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் முதல் இரு மாத நிதிக் கொள்கையை அறிவித்தபின்னர், மும்பை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் காலங்களில் பொதுவாக பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதற்கான காரணங்களை நீங்களும் யூகித்துக் கொள்ளமுடியும். நாங்களும் யூகிக்கமுடியும். இப்போது பணப்புழக்கம் தேர்தல் நடக்கிற மாநிலங்களில் மட்டுமல்லாது, அவற்றின் அண்டை மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதை நீங்கள் காண முடியும். அதில் ஏதோ இருக்கிறது. நாம் அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மக்களின் பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்து அதாவது ரூ.2 டிரில்லியனாக இருந்ததுதற்போது பொதுமக்களிடம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் கூடுதல் பணம் புழக்கத்தில் உள்ளது. இது அசாதாரணமான ஒன்றாகும். இது உடனடி கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றார்..
டெபாசிட் வளர்ச்சிவீதத்தை விட வங்கிகள் அளிக்கிற கடன்களின் வளர்ச்சிவீதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வங்கிகளில் டெபாசிட் வளர்ச்சி வீதம் 10 சதவீதத்திலிருந்து 9.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது 53 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளது.ஆனால் அதேவேளை இது ஆரோக்கியமான வளர்ச்சிவீதம்தான் என்றார்.