national890
புதுடெல்லி :
அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- தேசிய கீதமும், தேசியக்கொடியும் அவமதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மதிப்பு காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பல்வேறு தருணங்களில் இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதத்தின் சரியான வடிவம் பற்றியும், அதை எப்போதெல்லாம் பாட வேண்டும் என்பது குறித்தும், அதற்கு மரியாதை தரவேண்டியதின் அவசியம் பற்றியும் அவ்வப்போது வழிமுறைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. தேசிய கீதத்தின் முழு வடிவத்தை தோராயமாக 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும். அதன் குறுகிய வடிவத்தை சில தருணங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த குறுகிய வடிவத்தை 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
சில இடங்களில் முக்கிய நிகழ்வுகளில் காகித தேசிய கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் தேசிய கொடி பயன்படுத்தப்படுவதாகவும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காகித கொடிகள் போன்று பிளாஸ்டிக் கொடிகள் மட்காது. மேலும் சிதைந்தும் போகாது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. தேசிய கீதமும், தேசிய கொடியும் அவற்றின் கண்ணியம் குறையாமல் அவற்றுக்கான சட்ட விதிகளின்படி பார்த்து கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துடன் தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பான தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-ன் நகலும், இந்திய தேசிய கொடி சட்டம் 2002-ன் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை அல்லது தேசிய கொடியை அவமதித்தால் அந்த குற்றத்துக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.