தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.
இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக உருவாகிய தெலுங்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், சபாநாயகர், துணைச் சபாநாயகர், சட்டமன்றக் குழுத் தலைவர், துணைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா உள்பட அனைவரின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான மசோதா தெலுங்கான சட்டப்பேரவயில் இன்று ( மார்ச் 29) நிறைவேறியது.
தெலுங்கான சட்டசபையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ( மார்ச்- 28)ம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று அம்மசோதா நிறைவேறியது. அம்மசோதாவில் நிறைவேற்றப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு பற்றிய விவரம் வருமாறு-
எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சிக்களின் தற்போதைய சம்பளம் ரூ 12,000. மற்றும் இதர படிகள் ரூ 83,000 ஆகும். அது தற்போது அவர்களின் சம்பளம் ரூ.20,000 ஆகவும் இதர படிகள் ரூ 2.30 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் சம்பளம் மாதம் ரூபாய் 16 ஆயிரத்திலிருந்து ரூ. 51,000 ஆக உயர்த்தப்படுகிறது. எனினும், சிறப்பு உதவித்தொகை, செலவைக்கட்டுப்படுத்தும் உதவித்தொகை, பாதுகாப்பு கார் அலவன்சு முறையே ரூ .8,000, ரூ .7,000 மற்றும் ரூ .25,000 ஆக உள்ளது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்ப்டவில்லை.
ஆனால் முதலமைச்சர் வாகனத்தின் எரிபொருள் பயணப்படி (ஒரு குண்டு துளைக்காத கார் பயன்படுத்தப்பட்டால்) ரூ 15,000லிருந்து ரூ 30,000 என இருமடங்காக உயர்த்தப்படுகிறது . குண்டுதுளைக்காத வழக்கமான கார் பயன்படுத்தப்பட்டால் பயணப்படி ரூ 10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு கொறடா ஆகியோரின் சம்பளம் ரூ 14,000 லிருந்து ரூ 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் இதர படிகள் அனைத்தும் முதலமைச்சருக்கு இணையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் மற்றும் அவைத் தலைவர் ஆகியோரின் சம்பளம் ரூ 41,000 ஆகவும் மற்றும் ஏனைய படிகள் முதலமைச்சருக்கு இணையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.. துணைச் சபாநாயகர் மற்றும் அவை துணைத் தலைவர் ஆகியோரின் சம்பளம் ரூ 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கான படிகள் முதலமைச்சருக்கு இணையாக வழங்கப்படும்.
அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியமாக (ஒரு முறை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு) தற்போது வழங்கப்படும் சம்பளம் ரூ15 ஆயிரத்திலிருந்து ரூ 30,000 ஆக உயர்த்தப்ப்டுகிறது, ஒன்றுக்கு மேற்பட்டமுறை தேர்வு செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் Ipod மற்றும் Iphone இலவசமாக வழங்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் இறப்புக்குப்பின் அவர்களின் வாழ்க்கைத் துணைவருக்கு இனி முழு ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இறப்புக்குப்பின் பாதி ஓய்வூதியமே அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கு வழங்கப்படுகிறது.
120 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய தெலுங்கானா சட்டசபையில் 120 எம்.எல்.ஏக்கள், 40 சட்ட மேலவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தவிர 292 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 42 முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்கள் மற்றும் 171 விதவைகள் ஆகியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.