thiri1
காரைக்குடியில் விஜய் ரசிகர்கள்-போலீஸ் மோதல், தடியடி; ரசிகர் மன்றத் தலைவர் உள்பட 8 பேர் கைது
காரைக்குடியில் வியாழக்கிழமை “தெறி’ திரைப்பட விளம்பர பதாகையை அப்புறப்படுத்துவது தொடர்பான பிரச்னையில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் தடியடி நடத்தப்பட்டது. காரைக்குடி செக்காலைச் சாலையில் உள்ள திரையரங்கில் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் வெளியிடப்பட்டது. இதற்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் அனுமதிப் பெற்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக விளம்பர பதாகைகளை வைத்திருந்ததால் தேர்தல் விதிமுறை மீறியதாகக் கூறி அதை நகராட்சி அதிகாரிகள் காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
அப்போது சில பதாகைகள் கிழிக்கப்பட்டதாகக் கூறி விஜய் ரசிகர் மன்றத்தினர், அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் போலீஸார் மீது கல்வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி டி.எஸ்.பி. முத்தமிழ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முதல் காட்சியை காண ரசிகர் மன்றத்தினர் திரையரங்குக்குள் சென்று விட்டனர். இதற்கிடையே அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். பின்னர் படக்காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியே வந்த போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதுதொடர்பாக, காரைக்குடியைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் கார்த்திக் சுப்பிரமணியன் (28), விஜய் ரவி, திருப்பதி, திலீப்குமார் உள்ளிட்ட 8 பேரை காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.140 அடி உயர கட்அவுட் சரிந்தது: திருநெல்வேலி உடையார்பட்டியில் திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் 140 அடி உயர கட்அவுட் வியாழக்கிழமை சரிந்தது. இதில் போலீஸ் வாகனம் சேதமானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த “தெறி’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. உடையார்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜய்யின் 140 அடி உயர கட்அவுட் அமைக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலைக் காட்சிக்கு ரசிகர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரென கட்அவுட் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் கட்அவுட் சரிந்து விழுந்ததில் போலீஸ் வாகனம் உள்பட இரு வாகனங்கள் சேதமாகின. தகவலறிந்ததும் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.