பஞ்சாயத்து யூனியனில் இருந்து பார்லிமெண்ட் வரை புகுந்து புறப்புடுபவர் நியூஸ்பாண்ட். கீழ்மட்டத்திலிருந்து மிக மேல்மட்டம் வரை இவருக்கு தொடர்பு உண்டு. டில்லியில் செட்டிலாகிவிட்ட இவர், தற்போது தமிழகம் வந்திருக்கிறார். அவரைத் தேடிப்பிடித்து நமக்காக செய்தி சொல்லும்படி வேண்டி விரும்பி கேட்டோம். இனி அவ்வப்போது வருவார் உள்விவகார செய்திகளை அள்ளி அள்ளித் தருவார்…
“புதுப் பொலிவுடன் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை டாட் காம் இதழுக்கு வாழ்த்துகள்!” – புன்னகை பூங்கொத்துடன் அலவலகத்தின் உள்ளே நுழைந்தார் நியூஸ்பாண்ட்.
“உள்ளூர் முதல் உலக அரசியலின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து செய்திகளைக் கொண்டு வரும் நியூஸ் பாண்ட் அவர்களே.. வருக! வருக!” என்று நாம் தோரணையாகச் சொல்ல…
“நான் அரசியல் செய்திகளைக் கொட்டுபவன்தான்.. ஆனால் அரசியல்வாதி அல்ல…!” என்று பொய்ப்பயம் காட்டிச் சொன்னபடியே இருக்கையில் அமர்ந்தார்.
மேசையில், அவருக்குப் பிடித்தமான பலவித பழங்கள்.
“முதலில் ஆரஞ்சுப் பழத்தை வெட்டும்” என்று ஆபீஸ் பையனிடம் சொன்னவர், “இதன் மஞ்சள் நிற்ததுக்கேற்ற நியூஸையே முதலில் சொல்கிறேன்!” என்று செய்திக்குள் புகுந்தார்:
“யாருடனாவது கூட்டணி வைத்து எப்படியாவது இந்தத் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் கருணாநிதி. தன்னையும் தன் கட்சியையும் மிக மோசமாக விமர்சிக்கும் விஜயகாந்துக்குக்கூட வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். ஆனால் அவரது வாரிசுகளோ, தங்களுக்கிடையேயான மோதலை விடுவதாக இல்லை!”
“அழகிரியைத்தான் அனுப்பி விட்டார்கள்.. அவரும் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்! கட்சிக்குள் இருக்கும் கனிமொழியும் அண்ணன் ஸ்டாலினுக்கு அடக்கமாகத்தானே இருக்கிறார்.. வேறென்ன மோதல்?” என்றோம்.
“எந்த உலக்கத்தில் இருக்கிறீர்? அழகிரி அமுங்கிக்கிடப்பது உண்மைதான். ஆனால், கனிமொழி அப்படி இல்லை என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். கருணாநிதியிடம் தொடர்ந்து தனது செல்வாக்கை கனிமொழி நிலைநிறுத்துவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்!”
“ஓ…”
“ஆமாம்.. விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத்ததற்கும், ஏன், காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்ததற்குக்கூட கனிமொழியின் ஆலோசனையின்படிதான் என்கிறார்கள்!”
“உண்மையா..”
“அது எனக்குத் தெரியாது. ஆனால் அப்படித்தான் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கோபத்தை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள். அதில் ஒருவித கோபம், கடந்த ஐந்தாம் தேதி கனிமொழி பிறந்தநாளின் போது நடந்தது!”
“என்ன அது?”
“வெள்ள சேதத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.. ஆகவே இந்த பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்று அறிவித்திருந்தார் கனிமொழி. ஆனாலும், “பிறந்தநாள் கொண்டாடாத அற்புத பிறவியே” என்கிற ரேஞ்சுக்கு அவரது ஆதரவாளர்கள் சென்னை, விழுப்புரம், திருச்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டினார்கள். இதை உமது ரவுண்டஸ்பாய்கூட சொல்லியிருந்தாரே..”
“ஆமாம்.. ஆமாம்..!:
“அந்த போஸ்டர்கள் சிலரால் கிழிக்கப்பட்டதாம். கனிமொழி மீதான கோபம் மட்டுமல்ல.. அவருக்கு விடுக்கபட்ட எச்சரிக்கையும் இது என்று கட்சிக்குள் பேசுகிறார்கள்!”
“போஸ்டர் கிழிப்பெல்லாம் ஒரு பெரிய விசயமா?”
“ஹூம்… அரசியல் அரிச்சுவடி தெரியாமல் இருக்கிறீரே..! அரசியல் அடிப்படையே போஸ்டர்தான். கையில் சேடிலைட் டிவிக்களை வைத்திருக்கும் கட்சிகள்கூட, இன்னமும் போஸ்டரை நம்புகின்றவனவே.. ஏன் என்றால் அதன் முக்கியத்துவம் அப்படி! புரிகிறதா..?”
“ஓ…!”
“ஆமாம்… தனது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது குறித்து தந்தையிடம் வருத்தத்தைக் கொட்டியிருக்கிறார் மகள். தந்தையும் கலங்கிவிட்டாராம். பிறகு, தளபதியாரிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். பதில் அத்தனை நல்லவிதமாக வரவில்லையாம்!”
“ஆக, மீண்டும் புகைகிறது என்று சொல்லும்!”
சிரித்த நியூஸ்பாண்ட், மேஜையில் இருந்த கருந்திராட்சை ஒன்றை எடுத்து ரசித்து ருசித்தார். பிறகு, “திராட்சை நிறத்துக்கு ஏற்ற கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் பற்றி சொல்கிறேன்” என்றார் கிண்டலாக.
“சொல்லும், சொல்லும்… அவரது கட்சியின் பொதுக்குழு கூட்டம இன்று நடந்துகொண்டிருக்கிறதே.. இன்று கூட்டணி பற்றி அறிவிப்பாரா?”
“நான் விசாரித்த வரை அப்படி ஏதும் அறிவிக்கமாட்டார் என்கிறார்கள். இது வழக்கம்போல கண்துடைப்பு கூட்டம்தான். தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அளிப்பதாக தீர்மானம் போடுவார்கள். இதற்கு முன்பு இந்த அதிகாரம் வேறு யாரிடமாவது இருந்ததா என்ன..” – அடுத்த திராட்சையை எடுத்து சுவைத்த நியூஸ்பாண்ட் தொடர்ந்தார்:
“தே.மு.தி.கவின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மூவரும் இணைந்து ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள். அது, தி.மு.கவுடன் கூட்டணி என்பதுதான்!”
“நிஜமாகவா..”
“இதுவரை அதுதான் நிஜம். ஏனென்றால் மக்கள் நலக்கூடியக்கத்துடன் சேர்வதில் விஜயகாந்துக்கு விருப்பமில்லை. அது வெற்றிக்கூட்டணி இல்லை என்று அவர் நினைக்கிறார். பா.ஜ.க. தொடர்ந்து கூட்டணிக்கு அழைத்தபடிதான் இருக்கிறது. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஜெயிக்க முடியாது என்று நினைக்கிறார் விஜயகாந்த்”
“ஆனால், வசதியாக தேர்தலை சந்திக்கலாமே..” என்று நாம் சிரிக்க… நியூஸ்பாண்டும் சிரித்தபடி, “ அதே வசதியுடன்.. ஏன், அதைவிட அதிக வசதியுடன் தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருந்தால்..” என்று கேள்வியோடு நிறுத்தினார்.
“அங்கே இதயத்தில்தானே இடம் கிடைக்கும்..?” – நாம் கிண்டலாக சொல்ல.. “அந்த பீரியட் முடிந்துவிட்டது. தவிர அப்படி அசருகிற ஆள் அல்ல விஜயகாந்த். இவர்க தரப்பில் 113 சீட் மற்றும் தொகுதிக்கு “இவ்வளவு” என “செலவுக்கு” கேட்கிறார்கள்.
அவர்கள் தரப்பிலோ, தேர்தல் “செலவுக்கு” தாராளமாக தருகிறோம்.. ஆனால் சீட் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்கள்.. இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது அவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை!”
“ஓ.. அப்படியானால் இன்றைய பொதுக்குழுவில் தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜயகாந்த் பேசுவாரோ…”
“அப்படி எல்லாம் இருக்காது… வழக்கம்போல “இவங்க கூட்டணிக்கு கூப்பிடுறாங்க.. அவங்க கூப்பிடுறாங்க..” என்கிற அளவில்தான் பேசுவார். இப்போதே அறிவித்தால், கேட்டது கிடைக்காது என்பதை அறியாதவரா அவர்?”
அவர் சொல்லிமுடிக்க, அவரது செல்போன் சிணுங்கியது. எடுத்து எண்களைப் பார்த்தவர், “பொதுக்குழுவில் நடந்த செய்திகளோடு பிறகு பேசுகிறேன்..” என்றபடி செல்போனை காதில் பொறுத்தி பேசியபடியே கிளம்பினார்.