maylasia
கடந்த ஐந்தாண்டுகளில் 54,406 மலேசியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஜனவரியில் மட்டும் 1,102 பேர் தங்களது கடவுச்சீட்டை சமர்ப்பித்துள்ளனர். தங்கள் தாய்நாட்டு அரசின் செயலின்மையால் குடியுரிமையைத் துறப்பதோடல்லாமல், தங்களின் ஓய்வூதிய வைப்பு நிதிகளையும் திரும்பப் பெறுகின்றனர்.
இதன் முழு விவரம் பின்வருமாறு :
2010 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஜனவரி வரையில் உள்ள புள்ளிவிவரத்தின் படி 2011ம் ஆண்டு அதிகப்பட்சமாக 11,080 பேரும் 2010ம் ஆண்டு 10,644 பேரும் குடியுரிமையைத் துறந்துள்ளனர் எனும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2012 இல் 8,983 ஆகச் சற்றே குறைந்த இவ்வெண்ணிக்கை, 2013இல் 6,678 ஆகக் கணிசமாக குறைந்தது. ஆனால் 2014ல் மீண்டும் சற்றே உயர்ந்து 7,843 ஆகவும் 2015ம் ஆண்டு 8,076 ஆகவும் உயர்ந்தது.
முப்பது மில்லியன் மக்கள் தொகை கொண்ட மலேசியாவின் குடிமகன்கள் வெளிநாடுகளில் புதிய குடியுரிமைப் பெற்றது இந்நிகழ்விற்கு முக்கியக் காரணமாய் இருந்தாலும், கூடவே அவர்கள் தங்களுடைய வைப்பு நிதியையும் திரும்பப் பெறுவது அவர்களுக்கு மலேசிய அரசின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,206 பேர் இந்திய ரூபாய் மதிப்பில் 13.44 கோடிக்கும் மேல் வைப்பு நிதியைத் திரும்பப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் ஊழியர் வைப்புநிதி தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசு 2016ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசின் செலவைக் குறைக்கும் நோக்கில், ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் மக்கள் தங்களுடைய பங்களிப்பை 11 சதவிகிதத்திலிருந்து 08 சதவிகிதமாகக் குறைத்துக் கொள்ள அனுமதித்தது. இதன் மூலம் ஒவ்வொரு பயனாளியும் இந்திய ரூபாய் மதிப்பில் 3 முதல் 4 இலட்சம் வரை இழக்க நேரிடும்.
மேலும் மலேசியாவில் நடைபெறும் ஊழல், அரசின் மெத்தனப் போக்கு, அரசியல் ஸ்திரமின்மை ஆகியன வெளிநாடுகளில் இடம்பெயர்ந்துள்ள மலேசியர்களை அச்சமடையச் செய்துள்ளது.
மேலும் மலேசிய அரசு நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களைக் காரணம் காட்டி தங்களின் வைப்பு நிதியை அபகரித்து விடும் என்கிற அச்சம் அந்த மக்களை அவசர அவசரமாகத் தங்களின் வைப்பு நிதியைத் திரும்பப் பெற தூண்டியுள்ளது.
ஓய்வு ஊதியம் என்பது கஷ்டப் பட்டுச் சேர்த்தப் பணம். திடீரென ஒருநாள் தூங்கி எழுந்தவுடன் அதனை அரசு பறித்துக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென மக்கள் கருதுகின்றனர். எனவே மக்கள் இந்தப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதென முடிவெடுத்துள்ளனர் . அந்த இடம் தாய்நாட்டுக்கு வெளியே என்பது துரதிஷ்டவசமானது.
இந்தியாவிலும் 2016ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி ஊழியர் வைப்பு நிதியைத் திரும்பப் பெறும்பொழுது 60 சதவிகிதம் வரிப் பிடித்தம் செய்யப்படுமென பாராளுமன்றத்தில் அறிவித்தது இந்திய மத்தியவர்க்கத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி , சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு பொங்கி எழுந்தவுடன் அதனைத் திரும்பப் பெற்றது இங்கு ஒப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள அரசுகள் பெருமுதலாளிகளுக்கு வரிச் சலுகைகளையும் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் மத்திய வர்க்கத்தினரின் ஓய்வூதிய வைப்புநிதியினை பிடுங்க எத்தனிப்பதும் உள்ளபடியே கவலையளிக்கக் கூடிய விசயமாகும் .