தஞ்சை மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாததால் தாக்கப்பட்ட விவசாயிக்கு கடனை அடைக்க உதவி செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (50). இவர் 2011ஆம் ஆண்டு தஞ்சை நகரில் உள்ள மகேந்திரா நிதி நிறுவனம் மூலம் ரூ. 3.80 லட்சத்திற்கு டிராக்டர் வாங்கினார். டிராக்டர் வாங்கியதில் இருந்து முறையாக தவணை செலுத்தி வந்த பாலன் கடைசி இரண்டு தவணைகளை (ரூ.64 ஆயிரம்) மட்டும் கட்டவில்லை. .
இதனையடுத்து, நிதி நிறுவன ஊழியர்களும், காவல் துறையினரும் பாலனின் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்றார்கள். அப்போது பாலன், “டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டாம், விரைவில் தவணைகளை கட்டி விடுகிறேன்” என்று கெஞ்சியதோடு, டிராக்டரை விட்டு கீழே இறங்க மறுத்தார்.
இதனால், ஆத்திரமடைந்த காவல் துறையினர் பாலனை பலமாக தாக்கி, வலுக்கட்டையமாக தூக்கிச்சென்று காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றினர். இந்த சம்பவம் விவசாயி பாலனின் ஆதரவாளர்களால் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் காட்சி தொலைக்காட்சியிலும வெளியானது.
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை பகுதி விவசாயிக்ள் காவல்துறையினரின் செயலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளை தாக்கிய
காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸாரால் தாக்கப்பட்ட விவசாயிக்கு உதவி செய்ய தயார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“பாலன் நீங்கள் யாரேன்றே எனக்கு தெரியாது. ஆனால், நீங்கள் ஒரு விவசாயி. நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுகிறேன். உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்குகிறது என தெரியவில்லை. எனது உதவியை ஏற்று கொள்ளுங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.